தர்மபுரி, ஜன.26: தர்மபுரி மாவட்டத்தில், குடியரசு தினத்தையொட்டி 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்டுகளில் போலீசார் நேற்று தீவீர சோதனையில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில், குடியரசு தின விழா இன்று (26ம் தேதி) மாவட்ட விளையாட்டு அரங்கில் கொண்டாடப்படுகிறது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்து, காலை 8.05 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர், போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரியும் அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தொடர்ந்து மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இந்த விழாவில் அனைத்து துறை அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் செய்துள்ளனர். குடியரசு தினத்தையொட்டி, தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டில் நேற்று கொண்டுவரப்பட்டது. விளையாட்டு வீரர்கள் மற்றும் நடைபயிற்சிக்கு வந்தவர்கள் உள்ள செல்ல அனுமதிக்கப்படவில்லை. வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் மூலம் தீவிர சோதனை செய்யப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர். தர்மபுரி பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம், மக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் தொப்பூர் கணவாய், காரிமங்கலம், மஞ்சவாடி கணவாய், கோபிநாதம்பட்டி கூட்டுரோடு, காடுசெட்டிப்பட்டி, கிருஷ்ணாபுரம் என மாவட்டம் முழுவதுமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபோல், தர்மபுரி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸ் எஸ்ஐ சுந்தார்ராஜன் தலைமையில் ேபாலீசார் நேற்று ரயில்களில் சோதனை செய்தனர். ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடமைகள் மற்றும் ரயில் நிலையத்தில் நிறுத்தும் வாகனங்கள் சோதனை செய்தனர். அதுபோல் தர்மபுரி ரயில் நிலையத்திற்கு நின்று செல்லும் ரயில்களுக்குள் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தனர். மேலும், ரயில் நிலைய நுழைவாயில், நடைமேடை, ரயில்வே தண்டவாளம் பகுதியில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். குடியரசு தினத்தையொட்டி 700க்கும் மேற்பட்ட போலீசார் எஸ்பி மகேஸ்வரன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் வாகனங்கள் சோதனை செய்து அனுப்பப்பட்டது. தர்மபுரி மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
The post குடியரசு தினத்தையொட்டி 700 போலீசார் பாதுகாப்பு appeared first on Dinakaran.