செய்யாறு, ஜன.26: செய்யாறு டிஎஸ்பி சண்முகவேலன் உத்தரவின்பேரில் செய்யாறு சப்-டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் காட்டன் சூதாட்டம் தடுப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தூசி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தூசி சார்பதிவாளர் அலுவலகம் அருகே கும்பலாக இருந்தவர்களை கண்டு விசாரிக்கச் சென்றபோது போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பியோட முயன்றனர். உடனே அவர்களை போலீசார் பிடிக்க முயன்றபோது, போலீசாரை கண்டதும் அனைவரும் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்து தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இருப்பினும் போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில் தூசி கிராமம் அனுமந்தப் பேட்டையை சேர்ந்த பாபு(59), கோதண்டராமன்(70), காந்தி நகரை சேர்ந்த பாபு(49), பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த சத்யா(34), முஸ்லீம் தெருவை சேர்ந்த சையத் சர்தார்(59), காஞ்சிபுரம் வணிகர் தெருவை சேர்ந்த காமராஜ்(26) என்பதும் அவர்கள் காட்டன் சூதாட்டம் நடத்தியது தெரியவந்தது. உடனே அவர்களை 6 பேரை கைது செய்து, 4 செல்போன்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரையும் நேற்று செய்யாறு குற்றவியல் நீதி மன்றத்தில ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post செய்யாறு அருகே காட்டன் சூதாட்டம் தடுக்கச்சென்ற போலீசாரை தாக்க முயற்சி; 6 பேர் கைது: 4 செல்போன்கள் பறிமுதல் appeared first on Dinakaran.