திருவண்ணாமலை, ஜன.26: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வார இறுதி விடுமுறை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக உயர்ந்தது. அதன்படி, நேற்று அதிகாலை கோயிலில் நடை திறக்கும் போதே, தரிசனத்துக்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அதையொட்டி, அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். தரிசன வரிசை ராஜகோபுரத்தையும் கடந்து ெவளி பிரகாரம் வரை நீண்டிருந்தது. காலை 8 மணிக்கு பிறகு பக்தர்களின் வருகை ஆயிரக்கணக்கில் அதிகரித்தது.
மேலும், ஆந்திர, தெலங்கானா மற்றும் கர்நாடக மாநில பக்தர்களின் வருகையும் மீண்டும் அதிகரித்திருக்கிறது. எனவே, பொது தரிசன வரிசை மற்றும் ₹50 கட்டண தரிசன வரிசையில், சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. வழக்கம் போல சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. அதோடு, ராஜகோபுரம் அடுத்த திட்டி வாசல் வழியாக பொது தரிசனம் அனுமதிக்கப்பட்டது. ₹50 கட்டண தரிசனம் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டது. தரிசனம் முடிந்ததும் தெற்கு கோபுரம் வழியாக வெளியில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்களின் வருகையால், திருவண்ணாமலை நகரில் வாகன நெரிசல் ஏற்பட்டது. எனவே, சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் அண்ணா நுழைவு வாயில், காந்திநகர் திறந்தவெளி மைதானம், தாலுகா அலுவலக வளாகம் போன்ற இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டன. கார், வேன் உள்ளிட்ட வாகனங்களையும் மாட வீதியில் அனுமதிக்கவில்லை. மேலும், அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்த பக்தர்கள் பலரும் கிரிவலம் சென்று வழிபட்டனர். அதனால், நேற்று கிரிவல பக்தர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்திருந்தது.
The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வெளி பிரகாரம் வரை வரிசை நீண்டது appeared first on Dinakaran.