×

வேங்கைவயல் விவகாரம் போலீஸ்காரர் உள்பட 3 பேருக்கு தொடர்பு தனிப்பட்ட காரணங்களுக்காகவே குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலப்பு: 13 பக்க குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரத்தில் விசாரணை முடிந்து போலீஸ்காரர் உள்பட 3 பேருக்கு எதிராக 13 பக்க குற்றப்பத்திரிகை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தனிப்பட்ட காரணங்களுக்காகவே குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் (மனித கழிவு) கலந்த விவகாரம் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ்.மணி, சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். இதை மறுத்த தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், வழக்கின் விசாரணை முடிவடைந்து போலீஸ்காரர் முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக ஜன.20ம் தேதி புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரியான தஞ்சை சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா, 13 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து விசாரணை மார்ச் 27ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ‘கடந்த 2022 டிசம்பர் 24ம் தேதி வேங்கைவயல் பட்டியலின குடியிருப்பைச் சேர்ந்த கனகராஜ் மகள் வாந்தி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதேபோல, வேங்கைவயலைச் சேர்ந்த பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக, 2022 டிச.26ம் தேதி வேங்கைவயலிலுள்ள குடிநீர்த் தொட்டியில் இருந்து வரும் தண்ணீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்டதாக சிலர் தொட்டியின் மீது ஏறிப் பார்த்து தெரிவித்தனர். எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், 2023 ஜன.14ம் தேதி விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 4 ஆய்வாளர்கள், 5 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 16 காவலர்கள் விசாரணைக் குழுவில் இடம்பெற்றனர்.

397 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 196 செல்போன் எண்கள், 87 செல்போன் டவர்கள் தொடர்புகள், பதிவான அழைப்புகள் குறித்தும் விசாரிக்கப்பட்டன. குடிநீர்த் தொட்டி இயக்குநராக இருந்த சண்முகத்தை, ஊராட்சித் தலைவர் பத்மா முத்தையா பணி நீக்கம் செய்ததாகவும், சண்முகத்துக்கு ஆதரவாக வேங்கைவயலைச் சேர்ந்தவர்கள் பேசியதால் விரோதம் ஏற்பட்டுள்ளது. மேலும், சம்பவத்துக்கு 2 மாதங்கள் முன்பு இதே குடிநீர்த் தொட்டியை சுத்தப்படுத்துவது தொடர்பாக கிராமசபைக் கூட்டத்திலும் முத்தையாவுக்கும், குற்றம்சாட்டப்பட்டுள்ள முரளிராஜாவின் தந்தை ஜீவானந்தத்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், இறையூர் மற்றும் வேங்கைவயலை உள்ளடக்கிய முத்துக்காடு ஊராட்சியின் தற்போதைய தலைவரான பத்மாவின் கணவர் முத்தையாவுக்கும் (முத்தையா முன்னாள் தலைவரும் கூட), வேங்கைவயல் ஊர் மக்களுக்கும் முன்விரோதம் இருந்ததாகவும், அதனால் அவரைப் பழிவாங்க வேங்கைவயலைச் சேர்ந்த போலீஸ்காரர் முரளிராஜா (32), சுதர்சன் (20), முத்துக்கிருஷ்ணன் (22) ஆகியோர் இந்தச் செயலைச் செய்துள்ளனர்.

சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், வேங்கைவயல், இறையூர் கிராமங்கள் அடங்கிய முததுக்காடு பஞ்சாயத்து தலைவராக உள்ள பத்மா முத்தையா, குடிநீர் தொட்டி ஆப்ரேட்டர் சண்முகத்தை பணி நீக்கம் செய்துள்ளார். இதையடுத்து, பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் வகையில் குடிநீரில் நாற்றம் வருவதாக முரளி ராஜா என்பவர் பொய் தகவலை பரப்பியுள்ளார். அதன்பின்னர் குடிநீர் தொட்டி மீது ஏறிய முத்துக்கிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர்.

வேங்கைவயல் விவகாரத்தில் வீடியோக்கள், புகைப்படங்கள், தடயவியல் ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை வைத்து குற்றவாளிகளை கண்டறிந்து உள்ளனர். போலீஸ்காரர் முரளிராஜாவை விசாரித்தபோது சம்பவத்தன்று பணிக்கு சென்று விட்டதாகவும், தனக்கு எதுவும் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சுதர்சனின் செல்போனில் எடுக்கப்பட்டு அழிக்கப்பட்ட போட்டோ மற்றும் வீடியோக்கள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீட்கப்பட்டது.

அதில், 26.12.2022 தண்ணீர் தொட்டி முழுவதும் நீரால் நிரப்பபட்டு எவ்வித மனித கழிவுகள் இல்லாமல் சுத்தமாக இருந்தது. மேலும், முரளிராஜா டேங்க் மேலே உட்கார்ந்தும், சுதர்சன் வீடியோ எடுத்தும், முத்துக்கிருஷ்ணன் சிரித்து கொண்டு உள்ள வீடியோ பதிவு சிக்கியது. மேலும், முத்துக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவர் முத்தையாவின் செல்போனில் நீர்த்தேக்க தொட்டியில் எடுக்கப்பட்ட போட்டோவில் ஒரு மனித கழிவுதுண்டு மட்டும் இருந்துள்ளது. சுதர்சனால் எடுக்கப்பட்ட போட்டோக்களில் அது இல்லை.

இவர்கள் இறங்கி வந்த பிறகு தான் தண்ணீரில் இருந்துள்ளது. பின்னர், முரளிராஜா நீர்த்தேக்க தொட்டியின் மேலே ஏறி சென்று, தனது செல்போனில் எடுத்த போட்டோவிலும் ஒரு துண்டு மட்டுமே புதிதாக கிடந்தது. சம்பவத்தன்று காலை 5 மணி முதல் மோட்டார் மூலம் தொட்டிக்கு நீர் ஏற்றப்பட்டு, காலை 7.30 மணியளவில் தான் திறக்கப்பட்டுள்ளது. 26.12.2022 காலை 5 மணிக்கு முன்பு மனிதகழிவை போட்டிருந்தால், அது சிதறி கரைந்திருக்கும். ஆனால், ஒரு துண்டு மட்டும் மிதந்ததால் தண்ணீர் ஏற்றுவது நிறுத்திய பின்புதான் அது போடப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பதற்றம் – போலீஸ் குவிப்பு
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை வெளியான பின் வேங்கைவயல் கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது. விடுதலை சிறுத்தைகள் தொடர் உண்ணாவிரதம் போராட்டம் அறிவித்திருந்ததால் வேங்கைவயல் கிராமத்துக்கு செல்லும் வெள்ளனூர், முத்துக்காடு சாலை, பூங்கொடி சாலை உள்ளிட்ட 7 இடங்களில் பேரிகார்டுகளை போலீசார் அமைத்துள்ளனர். புதுக்கோட்டை டவுன் டிஎஸ்பி அப்துல் ரகுமான் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வெளியூரை சேர்ந்தவர்கள், அனுமதியின்றி வேங்கைவயல் கிராமத்திற்கு செல்லக்கூடாது என்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

* கிராம மக்கள் போராட்டம் தடையை மீறி பங்கேற்ற விசிகவினர் 8 பேர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீதே குற்றம் சுமத்துவதாகக் கூறி அந்த கிராமத்தினர் நேற்று காலை ஊருக்குள்ளேயே அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினர். இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் பங்கேற்க அழைப்பும் விடுக்கப்பட்டது. இதையடுத்து, வெளிநபர்கள் கிராமத்துக்குள் வருவதைத் தடுக்கும் வகையில் வேங்கைவயல், இறையூர் கிராமத்துக்குள் வரும் 7 வழிகளிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

200-க்கும் மேற்பட்ட போலீசார் இந்தப் பணியில் ஈடுபட்டனர். ஊருக்குள் உள்ளூர் நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினரும் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், போலீஸ் காவலையும் மீறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்டச் செயலர் கரு. வெள்ளைநெஞ்சன், வடக்கு மாவட்டச் செயலர் இளமதி அசோகன் உள்ளிட்ட 8 பேரும் மக்களை சந்தித்து அவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களைக் கைது செய்த போலீசார் ஊருக்கு வெளியே அழைத்து வந்து விடுவித்தனர். இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு-எம்எல் (மக்கள் விடுதலை), தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, ஆம் ஆத்மி கட்சி இணைந்து நேற்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

* பாலிதீன் கவரில் மனித கழிவு தொட்டியின் மீது ஏறி செல்பி வைரலாகும் வீடியோ
வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர்த்தேக்க தொட்டியில் 2 வாலிபர்கள் பாலிதீன் கவரில் மனித கழிவுகளை எடுத்துக் கொண்டு ஏறினர். பின்னர் நீர்த்தேக்க தொட்டியில் சிரித்து பேசிக் கொண்டே செயலில் மிகவும் சாதாரணமாக ஈடுபடும் வீடியோ காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனித மலத்தை கலக்கும் முன், குடிநீர் தொட்டியின் மேல் நின்று சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் செல்பி எடுத்துள்ளதாக தெரிகிறது.

* ‘‘ஒத்துக்கவே கூடாது, அடிச்சாலும் ஒத்துக்கவே கூடாது’’ ஆடியோ வைரல்
வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக, இந்த வழக்கில் தொடர்புடைய சுதர்சனுக்கு அவரது தாய் மற்றும் அத்தை பேசும் ஆடியோவும், குடிநீர் தொட்டியில் கலக்க அசுத்தம் வைத்திருக்கும் வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. அதில் சுதர்சனிடம் அவரது தாய், அத்தை பேசும் ஆடியோ விவரம்:
தாய் : சுதர்சன் என்னைய…
சுதர்சன் : என்னமா?…
தாய் : உன்னைய விசாரிச்சுட்டாங்களா?…
சுதர்சன் : இன்னும் விசாரிக்கலம்மா, கூப்புடுரேன் இரு, போன் மேல போன் அடிக்காத, போனை புடிங்கிட்டு போயிடுவாங்க…
தாய் : சரிப்பா, இனிமேல் நான் போன் பன்னல, நீ தான் போன்பன்னி சொல்லணும்…
சுதர்சன் : இம்… இம்…
தாய் : ஒத்துக்கவே கூடாது, அடிச்சு கேட்டாலும் ஒத்துக்கவே கூடாது…
சுதர்சன் : இம்…
தாய் : அடிச்சு கேட்டாலும் ஒத்துக்க கூடாதுயா…
சுதர்சன் : அட, போன வையும்மா…
இவ்வாறு ஆடியோ முடிகிறது.
இதைத் தொடர்ந்து, அவரது அத்தை நலம் விசாரித்து பேசிய ஆடியோ விவரம்:
அத்தை : எப்பா நல்லா இருக்கீயாப்பா,
சுதர்சன் : அத்தை நல்லா இருக்கேன், நீங்க நல்லா இருக்கீங்களா…
அத்தை : அம்மா, சூர்யா எல்லாம் நல்லா இருக்காங்களா…
சுதர்சன் : நல்லா இருக்காங்க அத்தை.
அத்தை : என்னாய்யா ஆச்சு பிரச்சனை
சுதர்சன் : இம்… அம்மா அத்தை முரளி அண்ணனை தான் டவுட்பட்டு விசாரிக்கிறாங்க, அவரை இதுபன்ன பாக்குராங்க, நேத்து நெறைய பேரு வந்தாங்க, எதுவும் பன்னல, விட்டுட்டாங்க…
அத்தை : அய்யா, அய்யா கண்டுபிடிச்சி இருப்பாங்க, சொல்லமாட்டாய்ங்கிராங்க, ஒன்னும் தள்ளுபடி பன்னலயே..
சுதர்சன் : இல்லை அத்தை
அத்தை : (முரளி ராஜா) வேலைக்கு எதுவும் பிரச்சன வருமாயா?
சுதர்சன் : அதுமாரி எதுவும் பன்னமாட்டாங்க. அதான் அந்த அண்ணனும் பயந்துட்டு இருக்காங்க.
அத்தை : அய்யா பெயர சொல்லாம்மானாச்சும் இருந்துருக்கலாம். எதாவது கெடுபுடி பன்னுவாங்களே.
சுதர்சன் : இம்…
அத்தை : பாத்துக்கங்கப்பா
சுதர்சன் :சேரிங்கத்த… இவ்வாறாக அந்த ஆடியோ முடிகிறது. இது புதுக்கோட்டையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* நவீன தொழில்நுட்பம் மூலம் ஆடியோ, வீடியோ, போட்டோ மீட்பு
வேங்கைவயல் விவகாரத்தில், போலீஸ்காரர் முரளிராஜா தனது செல்போனில் இருந்த புகைப்படம், வீடியோ, ஆடியோ உள்ளிட்டவைகளை அழித்துள்ளதாக தெரிகிறது. மேலும், 2 பேரும் ஆடியோ, வீடியோ உள்ளிட்ட ஆதாரங்கள் அனைத்தும் குற்றம் செய்யப்பட்ட நபர்களால், அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிபிசிஐடி போலீசார் மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒரு வாலிபரின் செல்போன் ஆய்வு செய்யப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர்.

The post வேங்கைவயல் விவகாரம் போலீஸ்காரர் உள்பட 3 பேருக்கு தொடர்பு தனிப்பட்ட காரணங்களுக்காகவே குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலப்பு: 13 பக்க குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Tags : Vengkaiweil ,Pudukkottai ,Vengaivaal ,Vengkaiweal ,Venkaiweil ,Dinakaran ,
× RELATED வேங்கைவயல்: போராட்டத்திற்கு வந்த இருவர் கைது