- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- தாளமுத்து நடராசன்
- எழும்பூர்
- சென்னை
- தாளமுத்து
- நடராசன்
- மூலகொத்தளம், சென்னை
சென்னை: சென்னை, மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள மொழிப்போரின் வெற்றி வெளிச்சத்திற்கு ஒளிவிளக்குகளாய் நின்று உயிர்துறந்த தாளமுத்து, நடராசன் ஆகியோரின் நினைவிடம் ரூ.34 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அன்னைத் தமிழ் காக்க, முதற்கட்ட இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு, சிறை சென்ற நடராசன் 15.01.1939 அன்றும், தாளமுத்து 11.03.1939 அன்றும் வீர மரணம் அடைந்தனர்.
இந்தியைத் திணிக்க முயன்றோருக்கும், முயல்வோருக்கும் அச்சத்தை உருவாக்கிவிட்டுச் சென்றுள்ள தோழர்கள் நடராசன் – தாளமுத்து ஆகிய இருவரின் தியாகத்தைப் போற்றும் வண்ணம் சென்னை, மூலக்கொத்தளத்தில் தந்தை பெரியார் திறந்துவைக்கப்பட்ட நினைவிடம் தற்போது சிறப்பான முறையில் புதுப்பிக்கப்பட்டு, தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாளான இன்றையதினம் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.
மொழிப்போரின் வெற்றி வெளிச்சத்திற்கு ஒளிவிளக்குகளாய் நின்று உயிர்துறந்த திருவாளர்கள் தாளமுத்து – நடராசன் மற்றும் மொழிப்போர் தியாகி, சமூகப் போராளி தருமாம்பாள் ஆகியோரது திருவுருவப் படங்களுக்கு மலர் தூவியும், நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார். மரியாதை செலுத்திய பின்னர், மொழிப்போரின் வெற்றி வெளிச்சத்திற்கு ஒளிவிளக்குகளாய் நின்று உயிர் நீத்த திருவாளர்கள் தாளமுத்து, நடராசன் ஆகிய இருவருக்கும் சென்னை, எழும்பூரில் உள்ள தாளமுத்து-நடராசன் மாளிகை வளாகத்தில் திருவுருவச் சிலை நிறுவப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஐட்ரீம் மூர்த்தி, எழிலரசன், சுதர்சனம், ஆர்.டி.சேகர், எபினேசர், சங்கர், துணை மேயர் மகேஷ்குமார், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ரங்கநாதன், செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வைத்திநாதன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அருள், அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து நடராசனுக்கு எழும்பூரில் சிலை appeared first on Dinakaran.