×

குடியரசு தின உரையிலும் அரசியல் செய்து தமிழ்நாட்டின் அருமைகளை கொச்சைப்படுத்த வேண்டாம்: ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் கண்டனம்

சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்ட அறிக்கை: குடியரசு தின வாழ்த்து என்ற பெயரில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை வசைமாரி பொழிவதற்கு குடியரசு தினத்தை அரசியல் சட்டப்பதவியில் வகிக்கும் ஆளுநர் பயன்படுத்திக் கொண்டிருப்பது வேதனையானது, கண்டனத்திற்குரியது. பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என 3 நாட்களுக்கு முன்பு சொன்ன ஆளுநர், இப்போது அப்படியே மாற்றி பேசுவதற்கு இரட்டை நாக்கு தான் வேண்டும்.

வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெற்றோர் தங்கள் மகள்களை தமிழ்நாட்டுக்கு படிக்க அனுப்பும் போது பாதுகாப்பாக உணர்கின்றனர் என பேசிய உதடுகள் தான், இன்றைக்கு தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம், தீவிரவாத அச்சுறுத்தல் என்றெல்லாம் புரண்டு பேசுகின்றன. பல்கலைக்கழகங்களை அரசியல் களமாக மாற்ற செயல்படுவது ஆளுநர் தான். ஆனால் ஏதோ பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் பற்றி ஏன் அக்கறை நாடகம்?

வாட்ஸ் அப் பார்வேர்டுகளை வைத்து ஒரு உரையைத் தயாரித்து அதைப் பேசிவிட்டு போனால் மேடைக்கு முன்னால் அமர்ந்திருக்கும் சிலர் கைதட்டலாம். ஆனால் தமிழ் மக்கள் தெளிவானவர்கள். அரசியல் உரையிலும் எழுத்திலும் ஒவ்வொரு வரிக்கும் என்ன உள்நோக்கம் என்பதைப் புரிந்து கொள்ளும் விவரமானவர்கள். ஆளுநர் எதை வேண்டுமானாலும் பேசட்டும். அது தமிழ்நாடு அரசுக்கும், திமுகவுக்கும் சாதகமானதாகவே அமையும்.

தமிழ்நாடு அரசு மக்களிடம் பெரும் ஆதரவு பெற்றிருக்கிறது. அரசை எதிர்த்துப் பேச எந்தவொரு விவகாரமும் இல்லை. 2026 தேர்தலிலும் திமுகவே 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. இதெல்லாம் கேட்டு ஆளுநர் ரவி விக்கித்துப் போயிருப்பார். தமிழ்நாட்டின் பெருமைகளை நாங்கள் பேசுகிறோம். ஆளுநர் ரவி அரசியல்வாதி ரவியாக எங்களுக்கு பதில் சொல்லட்டும். அதை விடுத்து குடியரசு தினம், சட்டமன்றம் என எதை எடுத்தாலும் அரசியல் செய்து நம் நாட்டின் குடியரசுத் தினப் பெருமைகளையும், தமிழ்நாட்டின் அருமைகளையும் கொச்சைப்படுத்த வேண்டாம்.

The post குடியரசு தின உரையிலும் அரசியல் செய்து தமிழ்நாட்டின் அருமைகளை கொச்சைப்படுத்த வேண்டாம்: ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Republic Day ,Minister ,R.N. Ravi ,Chennai ,Adi Dravidian ,Mathivendan ,
× RELATED இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு...