* அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர் நேரில் நன்றி
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணித்தரமாக பேசியதால் தான் ஒன்றிய அரசு டங்ஸ்டன் சுரங்க ஏல திட்டத்தை கைவிட்டதாக அரிட்டாபட்டி போராட்ட குழுவினர் கூறி, முதல்வருக்கு நேரில் நன்றி தெரிவித்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று தலைமை செயலகத்தில், மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல உரிமையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு இத்திட்டம் ரத்து செய்யப்பட காரணமாக இருந்தமைக்காக, மதுரை மாவட்டம் – அரிட்டாபட்டி, வள்ளலார்பட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டி, நாயக்கர்பட்டி, செட்டியார்பட்டி, தெற்கு தெரு, மீனாட்சிபுரம், மாங்குளம் உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் சந்தித்தனர். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டனர்.
இந்த சந்திப்பின்போது வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி உடன் இருந்தார். பின்னர் டங்ஸ்டன் போராட்ட குழு நிர்வாகிகள் சென்னை, தலைமை செயலக வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: எங்கள் பகுதியில் ஒன்றிய அரசு கொண்டு வந்த டங்ஸ்டன் சுரங்கம் திட்டத்தால் அந்த பகுதியே பாலைவனம் ஆகிவிடும் என பயந்தோம். 48 கிராம மக்கள் ஒன்றுகூடி முடிவு எடுத்து, டங்ஸ்டன் சுரங்கம் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தியிடம் கோரிக்கை வைத்தோம்.
இந்த திட்டத்தை ரத்து செய்யும் அளவுக்கு நான் செய்கிறேன் என்றார். அதற்கு பிறகு நம்முடைய முதல்வர் அவர்கள், “நான் முதல்வராக இருக்கும் வரை இந்த திட்டத்தை உறுதியாக வர விடமாட்டேன்” என்று ஆணித்தரமாக சொன்னார். அவர்பேரவையில் அப்படி சொன்னது எங்களுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. அதற்கு பின்னால் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து அனைத்துக்கட்சி ஆதரவினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்டதற்கு பிறகு 500 ஏக்கர் இடத்தை மட்டும் விட்டுவிட்டு மீதம் உள்ள இடத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் எண்ணம் ஒன்றிய அரசுக்கு இருந்தது.
தலையை மட்டும் விட்டுவிட்டு மற்ற அங்கங்களை சிதைத்து விடுவோம் என்று சொன்னால் என்ன ஆவது? என்பது போன்ற உணர்வை நாங்கள் உணர்ந்தோம். இந்த நிலையில்தான், சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து, முதல்வர் அப்படி ஆணித்தரமாக பேசியதால்தான் ஒன்றிய அரசு அந்த திட்டத்தை கைவிடும் எண்ணத்திற்கு வந்ததே, நம்முடைய முதல்வர் அப்படியே பேசியதுதான். அதற்கு பிறகு நாங்கள் எல்லாரும் ஒன்றுகூடி, பல்வேறு போராட்டங்களை நடத்தி, அனைத்து சமுதாய மக்களும் கூடி சாதி, மத வேறுபாடின்றி பல போராட்டங்கள் செய்தாலும்கூட ஒன்றிய அரசு கடைசியில்தான் பணிந்தது.
டங்ஸ்டன் சுரங்கம் திட்டத்தை ரத்து செய்ததற்கு முழு காரணமாக இருந்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கத்தோடு நாங்கள் அனைவரும் வந்திருக்கிறோம். எங்களது மனமார்ந்த நன்றியை முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் தெரிவித்தோம். எங்கள் பகுதிக்கு நீங்கள் வர வேண்டும், இவ்வளவு பெரிய காரியத்தை செய்த உங்களை நாங்கள் எங்கள் ஊருக்கு வரவழைத்து பாராட்டு விழா நடத்த வேண்டும் என்றோம். அதை ஏற்றுக்கொண்டு, நான் வருகிறேன் என்று முதல்வர் கூறினார்.
எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. நாளை (இன்று) முதல்வர் வர வேண்டும் என்று எங்களுடைய அமைச்சர் (மூர்த்தி) கோரிக்கை விடுத்தார். உறுதியாக வருகிறேன் என்று சொல்லி விட்டார். அனைத்து சமுதாய மக்களின் சார்பில் நாளை (இன்று) முதல்வருக்கு பெரிய வரவேற்பை கொடுத்து, எங்களுக்கு அவர் செய்த செயலை பாராட்டி கைமாறாக அனைத்து சமுதாய மக்கள் சார்பாக அனைத்து கிராம மக்களும் திரண்டு வந்து முதல்வருக்கு வரவேற்பு கொடுத்து, எங்களது நன்றியை தெரிவிப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
* பாஜவினர் பேச்சுக்கு பதிலடி
பாஜ கட்சியினர், ‘தங்களால்தான் டங்ஸ்டன் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக கூறுகிறார்களே?’ என்ற கேள்விக்கு பதில் அளித்து அவர்கள் கூறும்போது, “மனிதனை இரண்டாக வெட்டிவிட்டு, நாங்கள் தான் வைத்தியம் பார்த்தோம் என கூறினால் எப்படி? தமிழக முதல்வரால்தான் இந்த திட்டம் கைவிடப்பட்டது. நாளை (இன்று) அரிட்டாபட்டி வரும் முதல்வரை வரவேற்க எங்கள் பகுதி மக்கள் அனைவரும் தயாராக உள்ளனர்” என்றனர்.
The post தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணித்தரமாக பேசியதால்தான் ஒன்றிய அரசு டங்ஸ்டன் சுரங்கத்திட்டத்தை கைவிட்டது appeared first on Dinakaran.