ஈரோடு: ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் சீமான் பிரசாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். அப்போது, நாதகவினரும் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாதக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 2வது நாளாக நேற்று காலை காளைமாட்டு சிலை சந்திப்பில் பிரசாரத்தை தொடங்கினார். இதனிடையே நாதகவை சேர்ந்த இடும்பாவன் கார்த்தி பெரியார் பற்றி விமர்சித்து பேசினார். அப்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டின் முன் நின்றிருந்த காங்கிரஸ் சிறுபான்மை பிரிவை சேர்ந்த ஜூபைர் அகமது தலைமையிலான காங்கிரசார் நாதகவினர் பிரசாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘பெரியார் வாழ்க’ என கோஷமிட்டனர்.
‘‘பெரியார் பற்றி தவறாக பேசிய சீமான் இந்த இடத்தில் பிரசாரம் செய்யக்கூடாது’’ எனவும் கோஷமிட்டனர். நாதகவை சேர்ந்தவர்களும், எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஈரோடு டவுன் போலீசார் காங்கிரஸ் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஜூபைர் அகமது சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் சமாதனம் செய்து அனுப்பி வைத்தனர். இதேபோல் நாதகவினரிடமும் போலீசார் சமரசம் பேசினர். இதையடுத்து திறந்த வேனில் அங்கு வ்நத சீமான் ஒரு சில நிமிடங்கள் பேசிவிட்டு சென்றார். இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
The post பெரியார் குறித்து விமர்சன பேச்சு; சீமான் பிரசாரத்திற்கு காங். கட்சியினர் எதிர்ப்பு: நாதகவினரும் கோஷமிட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.