×

இசைக்கலைஞர்களுக்கு மகுடம் பறையிசை ஆசானும்… புதுச்சேரி தவிலும்…

சென்னை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூரைச் சேர்ந்தவர் வேல்முருகன்(55). பறை இசை கலைஞர், பறை இசை கலைஞர்களை உருவாக்கும் ஆசானாக உள்ளதால் வேலு ஆசான் என அழைப்பார்கள். இவருக்கு, ஒன்றிய அரசு பத்ம விருது அறிவித்துள்ளது. விருது குறித்து ேவலு ஆசான் கூறுகையில், ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பல முறை மேடை ஏற்றியுள்ளேன். செம்மொழி மாநாடு, சென்னை சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் திறம்பட பணியாற்றியுள்ளேன். மலேசியா, சிங்கப்பூர், சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் என்னுடைய மாணவர்கள் உள்ளனர். என்னுடைய உயிர் மூச்சான பறையை, உலகமயமாக்க வேண்டும் என்பது தான் எனது நோக்கம். பறை கருவி இழிவானது அல்ல. மனிதன் வாய் பேசுவதற்கு முன் இசைக்கப்பட்ட கருவி இது. இந்த கருவி தான் என்னை அடையாளப்படுத்தியது.

பறைக்கும், எனது குருநாதர் சேவுகன் ஐயாவிற்கும் இந்த விருதை காணிக்கையாக்குகிறேன். என்னைத் தொடர்ந்து எனது மகன் பறை இசை கலைஞராக உள்ளார் என்றார். புதுச்சேரியை சேர்ந்த தவில் இசை கலைஞரான தட்சணாமூர்த்திக்கும் (68) பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அபிஷேகப்பாக்கத்தில் வசித்து வரும் தவில் இசை கலைஞர் தட்சணாமூர்த்தி, புதுவை கலைமாமணி விருது, டாக்டர் அம்பேத்கர் பெல்லோஷிப் தேசிய விருது-2011, டாக்டர் ஆப் மியூசிக் தவில் விருது, அம்பேத்கர் கலா தேசிய விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். விருது பற்றி அவர் கூறுகையில், என்னுடைய தாத்தா, அப்பா, அண்ணா ஆகியோர் நாதஸ்வர தவில் கலைஞர்கள். இது எங்களுடைய குலத்தொழில். நான் 15 வயதில் இருந்து தவில் இசை கலைஞராக இருந்து வருகிறேன். என்னுடைய இசை பயணம் தற்போது 52 ஆண்டுகள் கடந்துள்ளது.

பத்ம விருது பெறும் கனவை ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ளது. இது என்னுடைய 52 ஆண்டு உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்றார். முருகன் வாழ்த்து: ஒன்றிய இணை அமைச்சர் முருகன் விடுத்துள்ள அறிக்கையில், பத்ம விருது அறிவிக்கப்பட்ட மதுரை பறை இசைக்கலைஞர் வேலு ஆசான், புதுச்சேரி தவில் இசை கலைஞர் தட்சணாமூர்த்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post இசைக்கலைஞர்களுக்கு மகுடம் பறையிசை ஆசானும்… புதுச்சேரி தவிலும்… appeared first on Dinakaran.

Tags : Paraiisai Aasan… ,Puducherry… ,Chennai ,Velmurugan ,Alanganallur, Madurai district ,Velu Aasan ,Aasan ,Union Government ,
× RELATED 2025-26பட்ஜெட் உப்பு சப்பில்லாத, ஏமாற்றம்...