×

ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரி ரவிகுமாருக்கு தேசிய விருது: ஜனாதிபதி முர்மு வழங்கினார்

புதுடெல்லி: டெல்லியில் நடந்த 15வது தேசிய வாக்காளர் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று, சிறப்பாக பணியாற்றிய தேர்தல் அதிகாரிகளுக்கு விருது வழங்கி கவுரவித்தார். இதில், தேர்தல் நடைமுறைகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக முதல்முறையாக ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு சிறப்பாக செயல்பட்ட மாநிலத்துக்கான தேசிய விருதை அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரவிகுமாருக்கு ஜனாதிபதி முர்மு வழங்கினார். ஜார்க்கண்ட் மாநில ஐஏஎஸ் கேடர் அதிகாரியான கே.ரவிக்குமார், தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர். தற்போது இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக பதவி வகிக்கிறார்.

அங்கு இவர் கடந்த ஆண்டு மக்களவை தேர்தலையும், சட்டசபை தேர்தலையும் திறம்பட நடத்தினார். இந்த தேர்தல்களின்போது அவர், வாக்காளர் பட்டியலை சிறப்பான முறையில் ஒருங்கிணைத்து, முழுமையான தகவல்களுடன், பிழைகளே இல்லாமல் தயாரிக்க முயற்சி எடுத்தார். விடு வீடாக தேர்தல் அதிகாரிகள் சென்று, வாக்காளர்களையும் பட்டியலையும் பலமுறை சரிபார்த்து, அவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர்களை ஒட்டச்செய்தார். வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்க்க சிறப்பு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன. தேர்தலை சுதந்திரமாகவும், அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்திக்காட்டினார்.

கடைக்கோடி கிராமங்களில் கூட ஓட்டுச்சாவடிகள் ஏற்படுத்தியதுடன், போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார். நக்லைசட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் கூட முதல்முறையாக அமைதியான முறையில், மக்கள் அச்சமின்றி ஓட்டளிக்க ஏற்பாடு செய்தார். இப்படி எல்லா விதத்திலும் சிறப்பாக செயல்பட்டு, நாட்டிலேயே தேர்தல் செயல்பாடுகளை சிறப்பாக செய்து காட்டிய மாநிலம் என்ற பெருமையை ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு ரவிகுமார் பெற்றுத்தந்தார். இதற்காக அந்த மாநிலம், தேர்தல் நடைமுறைகளை சிறப்பாக செயல்படுத்தி நாட்டிலேயே தலைசிறந்த மாநிலம் என தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரி ரவிகுமாருக்கு தேசிய விருது: ஜனாதிபதி முர்மு வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : President ,Murmu ,Jharkhand ,Chief Electoral Officer ,Ravikumar ,New Delhi ,Draupadi Murmu ,15th National Voters' Day ,Delhi ,Chief Electoral Officer Ravikumar ,Dinakaran ,
× RELATED வினாத்தாள் கசிவுகளை தடுக்க புதிய...