×

இந்த வார விசேஷங்கள்

25.1.2025 – சனி
சபலா ஏகாதசி

வைகுண்ட ஏகாதசிக்குப் பிறகு வரும் முதல் ஏகாதசி. தை மாதம் தேய்பிறை திதியில் வரும் ஏகாதசிக்கு “சபலா ஏகாதசி’’ என்று பெயர். இந்த நாளில் விரதம் இருந்து திருமாலை வழிபட்டால் குறையாத செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருமாலின் அருளை பெறுவதற்காக கடைபிடிக்கப்படும் விரதங்களில் முதன்மையானது ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதத்தில் வரும் ஏகாதசிக்கும் ஒரு சிறப்பு பலன் உண்டு. இவை ஒவ்வொன்றும் ஒரு பலனை தரக் கூடியது. இறுதியாக வைகுண்ட பதவியையும் தர வல்லது ஏகாதசி விரதம். ஒருமுறை, நான்கு மகன்களுடன் ஒரு மன்னன் வாழ்ந்தான், அதில் “லும்பகா’’ என்ற பெயர் கொண்டவன் மிகவும் கொடூரமானவனாகவும், விஷ்ணுவை நம்பாதவனாகவும் இருந்தான். அவனது ஆணவ குணத்தால், அவன் ராஜ்யத்திலிருந்து வெளியேற்றப்பட்டான். அப்போதும், அவன் மாறவில்லை. மற்றவர்களிடமிருந்து திருடவும், காட்டில் கண்ணில் பட்ட விலங்குகளை கொன்றும் வாழத் தொடங்கினான். ஒரு நாள், அவன் நோய்வாய்ப்பட்டான். எதுவும் சாப்பிடவோ, குடிக்கவோ முடியவில்லை, இதனால் இரவு முழுவதும் விழித்திருந்தான். அதிர்ஷ்டவசமாக, அது சபல ஏகாதசி நாளாக அமைந்தது. இதனால், அவன் அறியாமல் விரதத்தைக் கடைப்பிடிக்கும் புண்ணியத்தைப் பெற்றான்.

இரவு கண்விழித்தபோது, ​​உடலளவிலும், மனதளவிலும் அவனுக்குள் ஒரு பெரிய வித்தியாசத்தை உணர்ந்தான். பக்தி உணர்வு வர அன்றிலிருந்து தீவிர பக்தரானான். தனது தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்டு தந்தையிடம் திரும்பினான். விஷ்ணு பகவான் அவனுக்கு ஒரு பேரின்ப வாழ்க்கையை வழங்கினார். இறந்த பிறகு முக்தி அடைந்தான். `சபல’ என்றால் செழிப்பு என்று பொருள். இந்த நாள் உங்கள் எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெற விஷ்ணுவை வழிபடுவது மிகவும் புனிதமானது. பகவான் கிருஷ்ணர் பிரம்மாண்ட புராணத்தில் சபல ஏகாதசியின் முக்கியத்துவத்தையும், இந்த நாளில் விரதம் கடைப்பிடிப்பதையும் மன்னர் யுதிஷ்டிரருக்கு கூறினார்.ஏகாதசியில் காலையில் எழுந்து நீராடி, விரதத்திற்குத் தயாராக வேண்டும். ஏகாதசியில் துளசி இலைகளைப் பறிக்கக்கூடாது. அன்று முழுவதும் பகவான் நாராயணனை நினைத்து விரதமிருந்து, அடுத்த நாள் காலை துவாதசி பாரணை செய்து, விரதத்தை நிறைவேற்ற வேண்டும். ஏகாதசி விரதம் இருந்து துவாதசி அன்று நம்மால் இயன்றளவு தானங்களைச் செய்தால், நம்முடைய பாவங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். சந்ததி வளரும். ஏகாதசி விரதத்தை முறையாக இருக்க முடியாதவர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள், ஆரோக்கிய குறைவு உள்ளவர்கள், சர்க்கரை நோய் போன்ற நோயால் அவதிப்படுபவர்கள், லேசான உணவு, பால் பழங்கள் எடுத்துக் கொண்டு உபவாசம் இருக்கலாம். முழு அரிசியை எக்காரணத்தை முன்னிட்டும் உபயோகிக்கக் கூடாது. பின்ன அரிசியில், அதாவது அரிசியை உடைத்து உப்புமா போன்ற பலகாரங்களைச் செய்து லேசாக, கால் வயிற்றுக்குச் சாப்பிடலாம். இதன் மூலம் பகவானுடைய திருவருள் கிடைப்பது மட்டுமல்ல, உடல் ஆரோக்கியமும் மேம்படும் என்பது மறைமுகமாக பலன் என்பதை மறந்து விடக்கூடாது.

27.1.2025 – திங்கள்
மகாபிரதோஷம்

இன்று தை மாத சோம வார பிரதோஷம். இன்று முழுக்க உபவாசமிருந்து சிவதரிசனம் முடித்த பிறகு, உப்பு, காரம், புளிப்பு இல்லாமல் உண்பது வழக்கம். பிரதோஷ தினத்தில் சோமசூக்த வலம் செய்வதன் மூலமாக, அந்த வருடம் முழுக்க ஈசனை வழிபாடு செய்த பலன், நமக்குக் கிடைத்துவிடும். பிரதோஷ தினம் சிவன் கோயிலில் செய்யப்படுகின்ற வேதபாராயணம், திருமுறை பாராயணம் ஆகியவற்றை அவசியம் செவி குளிரக் கேட்க வேண்டும். அன்றைய தினம் பிறை அணிந்த பெருமானுடன், அம்பாளும் முருகனும் இணைந்த கோலமாகிய சோமாஸ்கந்த மூர்த்தியை தரிசித்து வழிபட்டால் சகலவிதமான நன்மைகளும் வந்து சேரும்.

29.1.2025 – புதன்
தை அமாவாசை

பன்னிரண்டு அமாவாசைகளில் ஆடி அமாவாசையும், தை அமாவாசையும் மிக முக்கியம். இன்று திருவோண விரதமும் இருக்கிறது அதைவிட விசேஷம். பெருமாளுக்குரிய புதன் கிழமை இன்னும் சிறப்பு. “அமாவாசை திதி” என்பது, தாயாகிய சந்திரனும் தந்தையாகிய சூரியனும் இணையும் நாள் ஆகும். அமாவாசை வழிபாடு என்பது தெய்வ வழிபாட்டுக்கும் மேலாக பன்னெடுங்காலமாகவே நடைபெற்று வருகின்றது. “தென்புலத்தார் வழிபாடு” என்று இதனைச் சொல்வார்கள். வடமொழியில் பித்ருக்கள் வழிபாடு என்று சொல்லுவார்கள். மற்ற அமாவாசையில் முன்னோர் வழிபாடு நடத்தத் தவறியவர்கள்கூட இந்த அமாவாசை தினத்தன்று விசேஷமான வழிபாடுகள் நடத்துவது வழக்கம். இதன்மூலமாக முன்னோர்களின் ஆசிபெறலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு தடைகள் இருந்தாலும், வியாபார முன்னேற்றம் இல்லாமல் இருந்தாலும் குழந்தைச் செல்வங்கள் முதலிய விஷயங்கள் காலத்துக்கு நடக்காமல் இருந்தாலும், அவர்களுக்கு முன்னோர்களின் ஆசிகளில் தடை இருப்பதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. தை அமாவாசை வழிபாட்டை முறையாக நடத்துவதன் மூலமாக அவர்கள் ஆசிகளைப் பெறலாம். அன்றைய தினம் விரதமிருந்து முன்னோர்களை நினைத்து, நீர்நிலையில் அவர்களை மனப்பூர்வமாக அழைத்து, எள்ளும் நீரும் இறைக்க வேண்டும். இதனை தர்ப்பணம் என்பார்கள். எள் (திலம்) அவர்களுடைய பசியை தீர்க்கும். அதோடு சேர்ந்து விடுகின்ற தீர்த்தமானது அவர்களுடைய தாகத்தைத் தீர்க்கும். இந்த இரண்டும் கிடைத்த மன நிறைவில் அவர்கள் மகிழ்ச்சியோடு தங்கள் வாரிசுகளை வாழ்த்திச் செல்வார்கள்.

29.1.2025 – புதன்
நாங்குநேரி பெருமாள் கோட்டை எண்ணைக்காப்பு

திருநெல்வேலியிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில். இந்தத் திருத்தலத்துக்கு ஸ்ரீ வரமங்கை, வானமாமலை, நாங்குநேரி, தோதாத்ரி என்று பல பெயர்கள் உண்டு. ஆதிசேஷன் குடை பிடிக்க அமர்ந்த கோலத்தில் பெருமாள் வைகுண்ட காட்சியளிப்பதால், இத்தலம், ‘பூலோக வைகுண்டம்’ என்றே சிறப்பிக்கப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இந்தக் குடவரைக் கோயிலின் பிராகாரம் மிகவும் பெரியது. தை அமாவாசை ஒரு கோட்டை எண்ணெய்க்காப்பு உற்சவம் நடைபெறுகிறது.அன்று காலை 8.30 மணிக்கு மூலவருக்கு ஒரு கோட்டை நல்லெண்ணெயைக் கொண்டு அபிஷேகம், தொடர்ந்து பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரமாகி, மதியம் 1.30 மணிக்கு மகாதீபாராதனை நடைபெறும். மாலை 5 மணிக்கு தாயாரும், பெருமாளும் வெளிப் பிராகாரத்தில் உலா வரும்போது, சுவாமிக்கு முன்னதாக வெளிப்பிராகாரம் முழுவதும் மற்றும் கோயிலின் அனைத்து பகுதிகளிலும் லட்சம் தீபங்களை பக்தர்கள் ஏற்றுவர். அன்று இரவு 10.30 மணிக்கு கருடசேவை நடைபெறுகிறது. கருடவாகனத்தில் பெருமாள், அன்ன வாகனத்தில் தாயார், கிளி வாகனத்தில் ஆண்டாள் ஆகியோர் வீதியுலா வருவர்.

30.1.2025 – வியாழன்
சியாமளா நவராத்திரி

வருடத்தில் நான்கு நவராத்திரிகள் உண்டு. அதில் தை மாத அமாவாசை முதல் 9 நாட்கள் சியாமளா நவராத்திரி கொண்டாடப்படும். அம்பாளுக்கு ராஜசியாமளா ஸ்ரீ மாதங்கி என்று பலவிதமான திருநாமங்கள். மதங்கமா முனிவரின் மாதவப் புதல்வி அவதரித்த விசேஷமான நவராத்திரி இது. தசமஹாவித்யாக்களில் ஒன்பதாவது வித்யை இது. ஒருவருக்கு கலையோ பேச்சுத்திறனோ, கூர்மையான புத்தியோ, வித்தைகளில் மேம்பாடோ அடைய வேண்டும் என்று சொன்னால், இவளை வணங்க வேண்டும். வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதையாக விளங்குபவள். லலிதா பரமேஸ்வரியின் மந்திரியாக விளங்குபவள். இந்த அம்பிகையை போற்றும் விழாதான் சியாமளா நவராத்திரி. சரஸ்வதிதேவியின் தாந்த்ரீக ரூபம் என்று இவளைச் சொல்வார்கள். கலை தெய்வம் என்று சொல்வார்கள். சரஸ்வதி தேவியைப் போலவே கையில் வீணையை வைத்துக் கொண்டிருப்பாள். சாம்பலும் கருப்பும் நிறம் என்பதால் சியாமளை என்று சொல்வார்கள். தை அமாவாசையில் ஆரம்பித்து ஐந்தாவது தினமான பஞ்சமியில் திருவவதாரம் செய்ததாகச் சொல்லுவார்கள். இந்த ஒன்பது நாட்களும் வீட்டிலோ, இல்லை கோயிலிலோ, அம்பாளை சிறப்பு பூஜை செய்து வணங்குவதன் மூலமாக, எல்லாவிதமான கலைகளையும் அடையலாம். தம்பதிகள் ஒற்றுமையோடு வாழலாம். மனக் குழப்பங்கள் நீங்கி நிம்மதி பிறக்கும். சகல யோகங்களும் சித்திக்கும்.

30.1.2025 – வியாழன்
திருநாங்கூர் கருடசேவை

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழிக்கு அருகே திருநாங்கூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் 11 விஷ்ணு ஆலயங்கள் இருக்கின்றன. அதில் மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில், 11 ஆலயங்களின் சுவாமிகளும் ஆண்டுக்கொரு முறை கருடவாகனத்தில் எழுந்தருள்வார்கள். வேத வடிவமான கருடாழ்வார் மீது வேதத்தின் பொருளான இறைவன் எழுந்தருளும் திருக்கோலமே `கருட சேவை’. உற்சவத்தின் சிறப்பு நிகழ்வாக, திருநாங்கூரைச் சுற்றியுள்ள 11 திருக்கோயில்களிலிருந்து ஸ்ரீநாராயண பெருமாள் (மணிமாடக் கோயில்), ஸ்ரீ குடமாடு கூத்தர் (அரியமேய விண்ணகரம்), ஸ்ரீசெம்பொன்னரங்கர் (செம் பொன்செய் கோயில்), ஸ்ரீபள்ளிகொண்ட பெருமாள் (திருத்தெற்றியம் பலம்), ஸ்ரீஅண்ணன் பெருமாள் (திருவெள்ளக்குளம்), ஸ்ரீபுருஷோத்தமப் பெருமாள் (வண் புருஷோத்தமம்), ஸ்ரீவரதராஜன் (திருமணிக்கூடம்), ஸ்ரீவைகுந்த பெருமாள் (வைகுந்த விண்ணகரம்), ஸ்ரீமாதவ பெருமாள் (திருத்தேவனார் தொகை), ஸ்ரீபார்த்தசாரதி (திருபார்த்தன்பள்ளி), ஸ்ரீகோபாலன் (திருக்காவளம்பாடி) ஆகிய 11 பெருமாள் உற்சவமூர்த்திகள் திருநாங்கூர் மணிமாடக் கோயில் பந்தலில் எழுந்தருள, திருமங்கையாழ்வார் தனது தேவியான குமுதவல்லி நாச்சியாருடன் பந்தலில் எழுந்தருளி ஒவ்வொரு பெருமாளிடமும் சென்று மங்களாசாசனம் செய்வார். பிறகு ஆழ்வாரும் எம்பெருமான்களும் உள் மண்டபத்தில் எழுந்தருளுகின்றார்கள். அங்கே ஒரே நேரத்தில் எல்லா எம்பெருமான்களுக்கும் திரு மஞ்சன சேவை நடைபெறுகின்றது. பிறகு அந்தந்த எம்பெருமான்களுக்கு கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரம் ஆகிறது. இரவு 12 மணியளவில் கருடசேவை புறப்பாடு நடக்கிறது. 11 பெருமாள்களும் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளிப்பர். திருமங்கையாழ்வார் நாச்சியாருடன் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளுவார். மணவாள மாமுனிகளும் எழுந்தருளுகிறார். பின்பு வெண்குடையுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க வீதியுலா நடைபெறும். விடிய விடிய கருடசேவை உற்சவம் நடைபெறும்.

31.1.2025 – வெள்ளி
அப்பூதி அடிகளார் குருபூஜை

63 நாயன்மார்களில் மிகச் சிறந்த சிவத்தொண்டர் அப்பூதியடிகள் “ஆண்டவனும் அடியாரும் ஒருவரே” என்பதை உலகுக்குக் காட்டியவர் அப்பூதியடிகள். அவருடைய அவதாரம் நவக்கிரகங்களில் ஒருவராகிய சந்திரனுக்கு உரிய திங்களூர் ஆகும். திங்களூர் திருவையாறு அருகே உள்ளது. அப்பூதி அடிகளார் சிவபெருமானை வணங்குவதைவிட சிவபெருமானை வழிபடும் அப்பர் அடிகளை வணங்கி மிக எளிதாக சிவனருள் பெற்றார். திருநாவுக்கரசர் சீடராக தன்னைத்தானே கருதிக் கொண்டு அவர்மீது அன்போடு இருந்த அப்பூதி அடிகள், தன்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தும் திருநாவுக்கரசுக்கு உரியது என்று வைராக்கியம் செய்து கொண்டார். அறச்சாலைகள், குளங்கள், திருநந்தனவனங்க ளெல்லாவற்றையும் அப்பூதியடிகள் என்னும் பெயருடைய சிவனடியார் திருநாவுக்கரசு நாயனார் என்னும் பெயரிலேயே செய்தார். சுந்தரமூர்த்தி நாயனார் அப்பூதி அடிகளைப் பற்றி குறிப்பிடும்பொழுது,’’ “ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்’’ என்று குறிப்பிடுகின்றார். சிவபெருமானின் திருப்பெயரைவிட, சிவபெருமானின் அடியாராகிய திருநாவுக்கரசரின் திருப்பெயரை ஓதி எளிதாக சிவப்பேறு பெறலாம் என்பதை உணர்த்தியவர் அப்பூதியடிகள். அவர் குருபூஜை இன்று. (தை மாதம் சதய நட்சத்திரம்).

 

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Saturn ,Sabala ,Vaikunda Ekadasi ,Ekadasi ,Theipirai Diti ,Thai ,
× RELATED கும்ப ராசி ஆண் குடும்பத்தின் வேர்