×

ஐந்தாம் பாவத்தின் அற்புதங்கள்

ஒரு ஜாதகத்தின் மிக முக்கியமான பாவம் ஐந்தாம் பாவம். ஒன்று, ஐந்து, ஒன்பது எனும் இந்த மூன்று பாவங்களும் ஒன்றை ஒன்று பலமாகத் தொடர்பு கொண்டு, தீய கிரகங்களினால் கெட்டு விடாமல் இருந்தால் அந்த ஜாதகரின் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். காரணம் ஐந்தாம் பாவம் அத்தனை அற்புதங்களையும் தனக்குள் அடக்கி பொக்கிஷம் போல் வைத்திருக்கிறது. அதனால் அந்த பாவத்தை பூர்வ புண்ணிய பாவம் என்று சொல்லி வைத்தார்கள்.நம்முடைய பிறப்பு, நாம் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த பாவ புண் ணியங்கள் எந்த அளவில் இருக்கின்றன என்பதைத்தான் ஐந்தாம் பாவம் எடுத்துக்காட்டுகின்றது. புண்ணிய பலன்கள் அதிகமாக இருந்தால் ஐந்தாம் பாவம் வலிமையாக இருக்கும். பாவம் அதிகமாக இருந்தால் ஐந்தாம் பாவம் பழுது பட்டிருக்கும். ஐந்தாம் பாவம் பழுதுபட்டால் வாழ்க்கையும் பழுது பட்டது போலவே நகரும்.
ஐந்தாம் பாவத்தில் அப்படி என்னென்ன விஷயங்கள் எல்லாம் இருக்கின்றன என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்வோம்.

குழந்தை, பாட்டன். வம்சா வழி, பூர்வ புண்யம், மனம், எண்ணம், காதல், சந்தோஷம், அதிர்ஷ்டம், யோகம், போட்டி, இஷ்ட தெய்வம். சிற்றின்பம், மனத் திருப்தி, சூதாட்டம், குழந்தைகள், படைப்பாற்றல், உளவியல், மனநிலை, ஊக்கம், புலனாய்வு, வயிறு, வேடிக்கை, விளையாட்டுகள், நடிப்பு, நாடகம், திரையரங்குகள், பொழுதுபோக்கு, மந்திரம், தந்திரம், அறிவுக்கூர்மை, சூதாட்டம், குத்தகை, ஹோட்டல், கட்டடங்கள், இதயம், கல்லீரல், மண்ணீரல், ஜோதிடர்கள், தூதுவர்கள், பங்காளிகள், மன அழுத்தம், என பல விஷயங்கள் ஐந்தாம் பாவத்தில் உண்டு.எந்த ஒரு ஜாதகத்திலும் ஐந்தாம் அதிபதி லக்னத்திலிருந்து கணக்கிடும் பொழுது மறைவு ஸ்தானத்தில் இருப்பது நல்லதல்ல மற்றும் பாவத் பாவம் விதிப்படி ஐந்தாம் வீட்டிற்கு 6, 8, 12-ஆம் இடத்தில் ஐந்தாம் அதிபதி மறைவதும் நல்லதல்ல. ஒருவருடைய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் குரு அல்லது சுக்கிரன் அல்லது பௌர்ணமி சந்திரனால் பார்க்கப்பட்டு அதிக சுபத்துவம் அடைந்தால் அந்த ஜாதகர் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். மற்றும் ஐந்தாம் அதிபதி தசை வரும்போது சகல சௌபாக்கியங்களையும் அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுவார்.

ஜோதிடத்தில் குரு முதன்மை சுபகிரகம். குரு இருக்கும் வீட்டையும் சுபத்துவம் செய்வார். தன்னுடைய 5,7, 9-ஆம் பார்வையால் பார்க்கும் வீட்டையும் மற்றும் கிரகங்களையும் சுபத்துவப்படுத் துவார். குரு ஐந்தாம் பாவகத்தில் இருக்கும்பொழுது ஜாதகருக்கு நல்ல குழந்தை மற்றும் அதிர்ஷ்டங்கள் மேலோங்கி இருக்கும். ஐந்தாம் பாவக குரு தன்னுடைய 5-ஆம் பார்வையால் ஒன்பதாம் இடத்தைப் பார்ப்பதால் பெரும் கோணம் என்று சொல்லப்படும் 9-ஆம் இடமும் அதாவது பாக்கிய ஸ்தானமும் சுபத்துவம் அடையும் மற்றும் குருவின் 7-ஆம் பார்வை லாப ஸ்தானம் என சொல்லப்படும் 11-ஆம் இடத்தில் பார்ப்பதால் அதிக லாபங்களை அனுபவிக்க முடியும், மற்றும் தன்னுடைய விசேஷ 9-ஆம் பார்வையாக லக்னத்தைப் பார்ப்பதால் லக்னமும் புனிதம் அடையும். பிற்காலத்தில் உங்களின் குழந்தைகள் உங்களைக் காப்பாற்றும் வாய்ப்பு உள்ளதா என்பதை இந்த 5ஆம் பாவக சுபத்துவத்தில்தான் இருக்கிறது. பொதுவாக ஐந்தாம் வீடு மூன்று பலன்களைத் தருவது. அவை முறையே பூர்வ புண்ணியம், குழந்தைபாக்கியம், நுண்ணறிவு! பூர்வ ஜென்மம் பற்றி ஓரளவிற்குச் சொல்லலாம்! முழுமையாக அறிந்து சொல்ல முடியாது.

குறிப்பாக, குழந்தை பாக்கியத்தை வெறும் ஐந்தாம் பாவத்தைக் கொண்டு மட்டும் கணித்துவிடமுடியாது. சிலர் ஜாதகத்தில் ஐந்தில் ராகு கேது இருந்தால் குழந்தை பிறக்காது என்று சடக்கென்று சொல்லிவிடுவார்கள். அப்படியல்ல.காரகம், பாவகம் இரண்டையும் கவனித்துத் தான் சொல்ல முடியும். ராகுவின் காரகம் குழந்தையல்ல. அது ஐந்தில் இருந்தால் பாவத்தின் வலிமை குறையலாம். ஆனால் முழுதும் கெடாது.மேஷம், ரிஷபம் கடகம் கன்னி, மகரம் ஆகிய இடங்களில் இருக்கும் ராகு நற்பலனைச் செய்வார், ராகு 5-ஆம் அதிபதியாக இருந்து அவர் 1, 4, 7, 10 ஆகிய கேந்திராதிபதிகளுடன் இணைந்தால் யோகத்தை தருவார். கேந்திரத்தில் இருக்கும் பொழுது கோண அதிபதிகளுடன் இணைந்து நன்மையைத் தருவார்.

வீடு கொடுத்தவன் ஆட்சி உச்சம் போன்றவை ஆனால் அமோகமான பலனைச் செய்வார். ஐந்தில் இருக்கும் ராகு யாருடைய பார்வை வாங்கியிருக்கிறார் என்பதையும், யாருடைய சாரத்தைப் பெற்றிருக்கிறார் என்பதையும் கணிக்க வேண்டும். செவ்வாய் சனி போன்றோர் பார்வையோ இணைப்போ பெற்றிருந்தால் ராகு 5ஆம் இடத்தின் அதிர்ஷ்டங்களைப் கெடுப்பார் பிள்ளைகள் இருந்தும் இல்லாமல் வைப்பார், சூதாட்டம் மூலம் பணத்தை இழக்க வைப்பார். பெரும்பாலும் ராகுவைப் போல்தான் கேதுவும் செயல்படுவார் ஆனால் கேது எதையும் வளர்க்கும் தன்மை கொண்டவர், கேது நிழல் கிரகமானாலும் ராகுவைப் போல் இருள் கிரகம் இல்லை கேது கன்னி, விருச்சிகம், கும்பம் இந்த மூன்று வீடுகளில் இருக் கும் பொழுது நன்மைகளைச் செய்வார். வீடு கொடுத்தவன் ஆட்சி உச்சமானால் அமோகமான பலனைச் செய்வார். கேதுவிற்கு குரு சுக்கிர பார்வை கிடைக்கும் பொழுது மிகப்பெரிய சொகுசு வாழ்க்கையைக் கொடுப்பார்.

5-க் குடையவன் லக்னத்தில் இருந்தால் புத்திரர்களினால் சுகம் பெறுவான். தெய்வ பக்தி நிறைந்த பிள்ளை கிட்டவும் வாய்ப்பு இருக்கிறது.
5-க் குடையவன் இரண்டாமிடத்தில் இருந்தால் பிறக்கும் பிள்ளை குடும்ப விரோதி, தீயோரின் சேர்கை உள்ளவன்.
5-க் குடையவன் மூன்றாம் இடத்தில இருந்தால் பிறகும் பிள்ளை பராக்கிரமசாலி, வாக்கு சாதூர்யம் நிறைந்தவன். சாந்த குணம். சுகபோகி.
5-க் குடையவன் நான்காம் இடத்தில இருந்தால் பெரியோர்களிடம் ஈடுபாடு இருக்கும். துணி வியாபாரம் லேவாதேவி நடத்தல் ஆகிய தொழிலில் ஈடுபடலாம்.
5-க் குடையவன் 5 ஆம் இடத்தில் இருந்தால் பிள்ளை புத்திமான்; ஆற்றல் மிக்க பேச்சாளன்.
5-க் குடையவன் 6 ஆம் இடத்தில இருந்தால் மிகுந்த தோஷமுள்ள பிள்ளை பிறப்பான்.
5-க் குடையவன் ஏழாம் இடத்தில இருந்தால் ஜாதகருடைய மனைவி உறவினர்களுடன் அன்பு கொண்டவளாகவும், ஒழுக்கமுள்ள வளாகவும் அமைவாள்.
5-க் குடையவன் எட்டாம்மிடத்திலிருந்தால் அங்கத்தில் ஈனம் ஏற்படும் பிள்ளை தோன்றுவான். கோபம், கெட்ட பேச்சு, கெட்ட நடத்தை, வஞ்சகம், தரித்திரம் ஆகிய குணங்கள் இருக்கும்.
5-க் குடையவன் ஒன்பதாம் இடத்திலிருந்தால் கலை வல்லவன் உயர்பதவி தேடி வரும்.
5-க் குடையவன் பத்தாம் இடத்தில இருந்தால் அரசுப் பணியுடன் இணையும் வாய்ப்பு அதிகம். 5-க் குடையவன் 11 ஆம் இடத்தில இருந்தால் பிள்ளைக்கு சங்கீதம் வரும்.
5-க் குடையவன் 12 ஆம் இடத்திலிருந்து பாபகிரகங்களுடன் சேர்ந்தால் மகப்பேறு வாய்க்காது வாய்த்தாலும் பிரயோஜனப்படாது.இவை பொதுப் பலன்கள். பலிக்குமா என்பதை மற்ற அமைப்புக்கள், தசை புக்தி கணக்குளை வைத்துத்தான் ஆராய வேண்டும்.

The post ஐந்தாம் பாவத்தின் அற்புதங்கள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED இந்த வார விசேஷங்கள்