திருவண்ணாமலை, ஜன. 25: திருவண்ணாமலை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் 2வது நாளாக உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பொது மக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை உடனுக்குடன் தீர்வு காண அரசு அலுவலர்கள் களத்திற்கு வரும் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தை தமிழக முதலமைச்சர் கடந்தாண்டு அறிமுகப்படுத்தினார். அதன்படி, திருவண்ணாமலை தாலுகாவில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ என்ற திட்டத்தின் கீழ் 2வது நாளாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் அதிகாரிகள் நேற்று கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, திருவண்ணாமலை அடுத்த சோ.கீழ்நாச்சிப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்து பள்ளி மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டு காலை உணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களின் விவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் உணவு தரமாகவும் சுவையாகவும் உள்ளதா என மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாநகராட்சியில் செயல்படும் உழவர் சந்தையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் வேளாண் பொருட்கள் தரமாகவும் முறையான விலைகளில் விற்கப்படுகிறதா என்று பொதுமக்களிடம் கேட்டறிந்தார். உழவர் சந்தையில் தேவையான வசதிகள் குறித்து விவசாய விற்பனையாளரிடம் கேட்டறிந்தார். மேலும் உழவர் சந்தை வளாகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மரக்கன்று நடவு செய்தார். இந்த ஆய்வின்போது, டிஆர்ஓ ராமபிரதீபன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் சரண்யா தேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) வடிவேலன், தாசில்தார் துரைராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரித்திவிராஜ் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post பள்ளி, உழவர் சந்தைகளில் கலெக்டர் ஆய்வு ‘உங்களை தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாம்’ appeared first on Dinakaran.