×

ஆஸி ஓபன் அரையிறுதியில் வேகத்தால் வென்ற சின்னர் காயத்தால் வீழ்ந்த ஜோகோவிச்: கை நழுவிய 100வது சாம்பியன் வாய்ப்பு

மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் ஆடவர் அரையிறுதியில் நேற்று சாதனை மன்னன் ஜோகோவிச் காயத்தால் பாதியில் வெளியேறினார். மற்றொரு போட்டியில் இத்தாலி வீரர் ஜேனிக் சின்னர் அபார வெற்றி பெற்று இறுதிக்கு தகுதி பெற்றார். நேற்று நடந்த முதல் அரை இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் மோதினர். காலிறுதிப் போட்டியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்ட ஜோகோவிச் தடுமாற்றத்துடன் முதல் செட்டை எதிர்கொண்டார். பெரும் போராட்டத்துக்கு பின் அந்த செட்டை 7-6 என்ற புள்ளிக் கணக்கில் ஸ்வெரெவ் கைப்பற்றினார்.

அதன் பின் வலி தாங்க முடியாமல் சிரமப்பட்ட ஜோகோவிச், ஸ்வெரெவுக்கு கைகொடுத்து வாழ்த்தி விட்டு போட்டியில் இருந்து வெளியேறினார். இதனால், ஸ்வெரெவ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரை இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜேனிக் சின்னர்- அமெரிக்காவின் பென் ஷெல்டன் மோதினர். இந்த போட்டியில் சின்னரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஷெல்டன் திணறினார். அதனால், 7-6, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வென்ற சின்னர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதிப் போட்டி நாளை நடக்கிறது.

* ஜோகோவிச், இதுவரை 99 முறை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். அவற்றில் 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள். இந்த போட்டியில் காயத்தால் வெளியேறியதால், 100வது பட்டம் பெறும் வாய்ப்பை ஜோகோவிச் தவற விட்டார். மேலும், 24 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆஸ்திரேலிய டென்னிஸ் வீராங்கனை மார்க்கரெட் கோர்ட்டின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பும் அவருக்கு கைநழுவிப் போய் உள்ளது.

The post ஆஸி ஓபன் அரையிறுதியில் வேகத்தால் வென்ற சின்னர் காயத்தால் வீழ்ந்த ஜோகோவிச்: கை நழுவிய 100வது சாம்பியன் வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Djokovic ,Australian Open ,Melbourne ,Janicek Cinner ,Dinakaran ,
× RELATED ஆஸி.ஓபன் டென்னிஸ்: ஜூவரெவ் இறுதிப்போட்டிக்கு தகுதி