×

இந்தியா இங்கிலாந்து மோதல்: சென்னையில் இன்று டி20 விறுவிறுப்புக்கு கியாரன்டி: போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம்

சென்னை: இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2வது டி20 போட்டி இன்று இரவு சென்னையில் நடைபெறும். இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று, 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

முதல் போட்டியின் வெற்றிக்கு காரணமான ஆட்டநாயகன் வருண் சக்ரவர்த்தியின் சொந்த மண் என்பதால் கூடுதல் வேகம் காட்டக் கூடும். சஞ்சு, சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா என முன்வரிசை ஆட்டக்காரர்கள் வழக்கமான அதிரடியை காட்டினால் வெற்றி நிச்சயம். இன்று ஆடும் இந்திய அணியில் பெரிய மாற்றமிருக்காது. அதே சமயம், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் ஆட்டத்தில் சந்தித்த படுதோல்வி காரணமாக மாற்றங்களுடன் களம் காணும் வாய்ப்பு உள்ளது.

பந்து வீச்சில் ஜோஃப்ரா ஆர்ச்சர் மட்டுமே சிறப்பாக பந்து வீசினார். அதனால், வேறு பந்து வீச்சாளர்கள் அணியில் இடம் பெறலாம். முதல் போட்டியில் இங்கிலாந்தை இந்தியா அநாயாசமாக வீழ்த்தி உள்ள நிலையில் நடக்கும் 2வது டி20 என்பதால் இப்போட்டியை காண சென்னை ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

* இந்தியா: சூரியகுமார் (கேப்டன்), அக்சர் (து.கேப்டன்) அபிஷேக், அர்ஷதீப் சிங், ஹர்ஷித் ராணா, துருவ் ஜூரல், முகமது ஷமி, நிதிஷ்குமார், ஹர்திக் பாண்டியா, ரவி பிஷ்ணாய், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், திலக் வர்மா, வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர்.

* இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜோப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேகப் பெதேல், ஹாரி புரூக், பிரய்டன் கர்ஸ், பென் டக்கெட், லியம் லிவிங்ஸ்டோன், ஷாகிப் முகமது, ஜாமி ஓவர்டன், அடில் ரஷித், ரெஹன் அகமது, பில் சால்ட், ஜாமி சுமித், மார்க் வுட்.

* டி20 போட்டியை பார்க்க மெட்ரோ பயணம் இலவசம்
கிரிக்கெட் ஆட்டத்தை காண்பதற்கான அனுமதிச்சீட்டு வைத்திருக்கும் ரசிகர்கள் இன்று மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம். அதன்படி போட்டியை காண வரவும், இரவு போட்டி முடிந்து வீடு திரும்பவும் மட்டுமே இப்படி கட்டணமின்றி பயணிக்க முடியும்.

சேப்பாக்கத்தில் இந்தியா
* சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியா 2007ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறது. இந்தியா இதுவரை ஆடிய 243 டி20 போட்டிகளில் 81, இந்தியாவில் நடந்தவை. அவற்றில் இரண்டு டி20 போட்டிகள் மட்டுமே சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் அரங்கில் நடந்துள்ளன.

* 2012ம் ஆண்டு சென்னையில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

* மற்றொரு ஆட்டத்தில் 2018ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது.

* நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தவிர, சேப்பாக்கத்தில் டி20 ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதும் 3வது அணி இங்கிலாந்து.

The post இந்தியா இங்கிலாந்து மோதல்: சென்னையில் இன்று டி20 விறுவிறுப்புக்கு கியாரன்டி: போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : India ,England ,Giaranthi ,T20 ,Chennai ,Kolkata ,Dinakaran ,
× RELATED இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள்...