×

சிறையில் ஓவியம் வரைந்து பழகும் கிரீஷ்மா: மரண தண்டனை விதிக்கப்பட்டும் எந்த குற்ற உணர்வும் இல்லை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே உள்ள பாறசாலையை சேர்ந்த குமரி கல்லூரி மாணவர் ஷாரோன் ராஜை கஷாயத்தில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் களியக்காவிளையை சேர்ந்த கிரீஷ்மாவுக்கு நெய்யாற்றின்கரை நீதிமன்றம் கடந்த 20ம் தேதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மரண தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து கிரீஷ்மா திருவனந்தபுரம் அட்டக்குளங்கரை மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வழக்கமாக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தனி செல்லில்தான் அடைக்கப்படுவார்கள். ஆனால் உயர்நீதிமன்றத்தில் இவர் மேல் முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதால் தற்போது 4 பேர் கொண்ட செல்லில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்களில் 3 பேர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், ஒருவர் போக்சோ கைதி ஆவார். இந்த ஆண்டின் முதல் கைதி என்பதால் கிரீஷ்மாவுக்கு 1/2025 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. இவர் விசாரணை கைதியாக இருந்த போதும் இதேசிறையில் தான் 11 மாதங்கள் அடைக்கப்பட்டிருந்தார்.

அப்போது சக பெண் கைதிகளுடன் தகராறில் ஈடுபட்டதால் பின்னர் இவர் மாவேலிக்கரை சிறைக்கு மாற்றப்பட்டார். ஏற்கனவே இந்த சிறையில் இருந்ததால் இங்குள்ள எல்லா பகுதிகளும் கிரீஷ்மாவுக்கு நன்றாகவே தெரியும். சிறையில் இவரது முக்கிய பொழுதுபோக்கு ஓவியம் வரைவது ஆகும். கடந்த முறை சிறையில் இருந்த போதும் இவர் பெரும்பாலும் ஓவியம் வரைந்து தான் பொழுதை கழித்து வந்தார்.

மரண தண்டனை கைதிகளுக்கு பெரும்பாலும் சிறையில் பணிகள் எதுவும் வழங்கப்படுவது கிடையாது. அதிகபட்ச தண்டனை கிடைத்துள்ள போதிலும் கிரீஷ்மாவுக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். சமீபத்தில் பெற்றோர் வந்து சந்தித்தபோது மகளை பார்த்து அவர்கள் இருவரும் கதறி அழுதனர். ஆனால் கிரீஷ்மாவின் முகத்தில் எந்த சலனமும் ஏற்படவில்லை என்றும் சிறை அதிகாரிகள் கூறினர்.

The post சிறையில் ஓவியம் வரைந்து பழகும் கிரீஷ்மா: மரண தண்டனை விதிக்கப்பட்டும் எந்த குற்ற உணர்வும் இல்லை appeared first on Dinakaran.

Tags : Krishma ,Thiruvananthapuram ,Kaliyakavilai ,Neyyarrinkarai court ,Sharon Raj ,Kumari College ,Parasalai ,
× RELATED மரண தண்டனையை ரத்து செய்ய கோரி கிரீஷ்மா அப்பீல்