சென்னை: சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு திரைப்பட இயக்குநர் இயக்குனர் அமீர் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து கடந்த ஜூன் 26ல் அவரை கைது செய்தது. பின்னர் அவரது சகோதரர் முகமது சலீமை ஆகஸ்ட் மாதம் கைது செய்தது. இந்த வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனாபானு, ஜாபர் சாதிக் சகோதரர் முகமது சலீம் மற்றும் திரைப்பட இயக்குனர் அமீர் உள்ளிட்ட 12 தனி நபர்களும், ஜாபர் சாதிக்கின் பட தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட 8 நிறுவனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கு கூடுதல் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழில் வேலவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமீர் உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகினர். அமலாக்கதுறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றஞ்சாட்டப்பட்ட நோரோடின், அப்துல் ரஹீம் ஜின்னா, பெரோஸ்கான் போஹரி (எ) பெரோஸ் கான் ஆகிய 3 பேர் முகவரி மாறியுள்ளனர். அதனால் அவர்களுக்கு சம்மன் சென்றடையவில்லை. எனவே இறுதி வாய்ப்பாக சம்மன் வழங்க வேண்டும். அடுத்த விசாரணைக்குள் இல்லை என்றால் அது தொடர்பாக மனு தாக்கல் செய்கிறோம் என்றார். இதையடுத்து, விசாரணையை பிப்ரவரி 7ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
The post அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு திரைப்பட இயக்குநர் அமீர் சிபிஐ கோர்ட்டில் ஆஜர் appeared first on Dinakaran.