குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு அமல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் குடியரசு தின பாதுகாப்பு காரணமாக 7 அடுக்கு பாதுகாப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இது வரும் 26ம் தேதி நள்ளிரவு வரை அமல்படுத்தப்படுகிறது. நாட்டின் 76வது குடியரசு தின விழா கொண்டாட்டத்தை ஒட்டி, சென்னை விமான நிலையத்தில் கடந்த 20ம் தேதி அதிகாலையில் இருந்து 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்போது உச்சக்கட்ட பாதுகாப்பாக 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு போலீஸ் அதிரடிப்படையினர், என்எஸ்ஜி எனப்படும் தேசிய பாதுகாப்பு படை, பிசிஏஎஸ் எனப்படும் விமான பாதுகாப்பு படையினர், உளவுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஆகியோர் கொண்ட 1000க்கும் மேற்பட்ட தனிப்படையினர், தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை சென்னை உள்நாட்டு விமான நிலையம் டெர்மினல் 4 பகுதியில் பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. அந்த நேரத்தில், விமான நிலையத்திற்குள் நாச வேலையில் ஈடுபடுவதற்காக தீவிரவாதி ஒருவன் உள்ளே புகுந்து விட்டதாகவும், அவனை அதிரடிப்படை தேசிய பாதுகாப்பு படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்டோர் சுற்றி வளைத்து பிடிப்பது போல் ஒத்திகை நடத்தினர்.
அதோடு சென்னை விமான நிலையத்தில் அனைத்து வகை பாதுகாப்பு ஏற்பாடுகளும் திட்டமிட்டபடி செயல்பாட்டில் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தினர். இந்த 7 அடுக்கு பாதுகாப்பு முறை வரும் 26ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்றும், அதன் பின்பு வரும் 30ம் தேதி நள்ளிரவு வரை 5 அடுக்கு பாதுகாப்பு முறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு அமல் appeared first on Dinakaran.

Related Stories: