அதன்படி நாளை (26ம் தேதி) காலை 8 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைப்பார். அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தேசியக்கொடிக்கு மலர் தூவவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து முப்படை வீரர்கள் மற்றும் தமிழக காவல் துறையின் அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதைத்தொடர்ந்து பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சியும் நடைபெறும். அணிவகுப்பு நிகழ்ச்சிகள் முடிந்ததும் முதலமைச்சரின் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறையின் சிறப்பு விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவிப்பார். பின்னர் பதக்கம், பாராட்டு சான்றிதழ் பெற்றவர்கள் அனைவரும் ஆளுநர், முதல்வருடன் நின்று குழு புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள்.
தேசியக்கொடி ஏற்றப்படும் மெரினா காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் என 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள் மற்றும் துணை கமிஷனர்கள் தலைமையில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள், மாணவ-மாணவிகள் குடியரசு தின நிகழ்ச்சியை நேரில் பார்க்கவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடியரசு தின அணி வகுப்பில் ராணுவ படை பிரிவு, வான் படை, கடலோர காவல் படை, சிபிஆர்எப், ஆர்பிஎப், தமிழ்நாடு சிறப்பு காவல், தமிழ்நாடு கமோண்டோ ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு, வனத்துறை, தீயணைப்பு துறை, ஊர்க்காவல் படை, தேசிய சாரணர் படை உள்ளிட்ட வீரர்களின் கண்கவர் அணிவகுப்பும், செய்தித்துறை, காவல் துறை, கூட்டுறவு துறை, வேளாண்மை துறை, சுற்றுலா துறை உள்ளிட்ட 25 துறை சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
The post சென்னையில் குடியரசு நாள் விழா ஏற்பாடுகள் தீவிரம் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைப்பார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணா பதக்கம் வழங்குகிறார் appeared first on Dinakaran.