களக்காடு: மங்களூரு கூட்டுறவு வங்கியில் துப்பாக்கி முனையில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் நெல்லையில் கைதான கொள்ளையன் வீட்டின் உரக்கிடக்கு, தோட்டத்தில் மூட்டையில் பதுக்கி வைத்திருந்த 18.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு அருகே உல்லால் பகுதியில் செயல்பட்டு வரும் கோட்டேகார் கூட்டுறவு வங்கியில் கடந்த 17ம்தேதி முகமூடி அணிந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை மிரட்டி ரூ.4 கோடி மதிப்பிலான தங்க நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உல்லால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கொள்ளையில் ஈடுபட்ட நெல்லை மாவட்டம் களக்காடு அருகே பத்மநேரியை சேர்ந்த முருகாண்டி (36), கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த ஜோஷ்வா (எ) ராஜேந்திரன் ஆகியோரை தனிப்படை போலீசார் கடந்த 21ம் தேதி அம்பையில் கைது செய்து அம்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கர்நாடகா அழைத்துச் சென்றனர். இந்த வங்கி கொள்ளை சம்பவத்தில் ஏற்கனவே நெல்லையை பூர்வீகமாகக் கொண்ட மும்பை, செம்பூர் திலக் நகரைச் சேர்ந்த கண்ணன் மணி (36) என்பவரை துப்பாக்கியால் தனிப்படை போலீசார் சுட்டுப்பிடித்தனர். அவரிடமிருந்து 2 மூட்டைகளில் ரொக்கப் பணமும், 2 துப்பாக்கிகள், 3 குண்டுகள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கைதான முருகாண்டியின் பத்மநேரி வீட்டில் நேற்று மங்களூரு தனிப்படை போலீசார் 20க்கும் மேற்பட்டோர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் 2 சாக்கு மூட்டைகளிலும், 2 சூட்கேஸ்களிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 18.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவைகள் மங்களூரு வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என்பது உறுதியானது. அத்துடன் கொள்ளை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக கூறி அவரது தந்தை சண்முக சுந்தரத்தையும் (60) போலீசார் கைது செய்து, நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது சண்முகசுந்தரத்துக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர் உடல்நலம் தேறிய பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து மங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கர்நாடகா போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் முருகாண்டி தனது வீடு தவிர வேறு எங்கேயாவது நகைகளை பதுக்கி வைத்துள்ளாரா? என்பது குறித்தும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மங்களூரு வங்கி கொள்ளை தொடர்பாக நெல்லையில் சோதனை உரக்கிடங்கு, தோட்டத்தில் பதுக்கிய 18.5 கிலோ தங்க நகை பறிமுதல்: கொள்ளையனின் தந்தை அதிரடி கைது appeared first on Dinakaran.