டெல்லியில் விரைவில் திருக்குறள் மாநாடு: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தகவல்

புதுச்சேரியில்: டெல்லியில் விரைவில் திருக்குறள் மாநாடு நடைபெறும் என்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சர்வதேச பள்ளி மற்றும் இந்திய பள்ளி உளவியல் சங்கம் மற்றும் வடோதரா ஹிப்னாசிஸ் அகாடமி இணைந்து நடத்தும் சர்வதேச 2வது உளவியல் மாநாடு புதுச்சேரி பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தில் நேற்று துவங்கியது. ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் மாநாட்டை துவக்கி வைத்து, மாணவர்களின் உளவியல் குறித்து பல்வேறு ஆராய்ச்சியாளர்கள், வல்லுனர்கள் எழுதிய புத்தகங்களை வெளியிட்டார்.

மேலும், வாழ்நாள் சாதனையாளர், தலைமைத்துவ விருதுகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் முருகன் பேசுகையில், ஆசிரியர்கள், திருக்குறளால் ஈர்க்கப்பட்டு, மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். திருக்குறள் பொருள் நிரந்தரமானது. இது, தமிழின் சிறந்த பொக்கிஷங்களில் ஒன்று. செயற்கை நுண்ணறிவு, இணையதளம், விஎல்எஸ்ஐ தொழில்நுட்பம், சாட்ஜிபிடி என எதுவாக இருந்தாலும் திருக்குறளுக்கு அப்பாற்பட்டது அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: பல்வேறு உலக நாடுகளில் இருந்து தமிழ் சான்றோர்களின் விருப்பமான திருக்குறள் மாநாட்டை டெல்லியில் நடத்துவதற்கான பிரவுசரை வெளியிட்டுள்ளேன். விரைவில் திருக்குறள் மாநாட்டிற்கான தேதி அறிவிக்கப்படும். பிரதமர் மோடி, உலகம் முழுவதும் திருவள்ளுவரையும், திருக்குறளின் பெருமையையும் கொண்டு செல்கிறார். தேர்தல் அறிக்கையில் பிரதமர் மோடி கூறியபடி 4 மாதத்தில் 5க்கும் மேற்பட்ட நாடுகளில் கலாச்சார மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post டெல்லியில் விரைவில் திருக்குறள் மாநாடு: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: