×

பத்திரிகையாளர்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் சீமானுக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம்

சென்னை: பெண் செய்தியாளரிடம் முகம்சுளிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தலைவர் சுரேஷ் வேதநாயகம், பொதுச் செயலாளர் அசீப் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்தும் கண்ணியக் குறைவான வார்த்தைகளை தொடர்ந்து பயன்படுத்திவரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. ஊடகங்களில் உரையாடும் எளிய மனிதர்களே நாகரிகமான சொற்களை பயன்படுத்தும் போது, ஒரு கட்சித் தலைவரான சீமான் பொது இடங்களிலும் ஊடக சந்திப்புகளிலும், தொடர்ந்து ஆபாச மற்றும் இழிவான சொற்களை பயன்படுத்தி வருவது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

கோவையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், சீமான் மீது பிரபாகரனின் அண்ணன் மகன் எழுப்பிய குற்றச்சாட்டுகளை கேள்வியாக முன்வைத்த பெண் செய்தியாளரிடம் முகம்சுளிக்கும் வகையில் சீமான் பதிலளித்திருக்கிறார். செய்தியாளரை தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றாலும், பெண் செய்தியாளருக்கு பதிலளிக்கிறோம் என்ற கவனமும் பொறுப்பும் இல்லாமல் ( அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளைக் கொண்டு) சீமான் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. சீமான் பொது இடங்களிலும், ஊடக சந்திப்புகளிலும் முதிர்ச்சியான சொற்களைப் பயன்படுத்துவதும், கண்ணியம் அறிந்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.

The post பத்திரிகையாளர்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் சீமானுக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Chennai Press Council ,Seeman ,Chennai ,Naam Tamil Party ,President ,Suresh Vedhanayagam ,General Secretary ,Aseeb ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது...