×

பஞ்சாபில் தமிழ்நாடு கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது: தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை: பஞ்சாபில் தமிழ்நாடு கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 2024-2025 ஆண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்களுக்கான கபடி போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குருகாசி பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து 4 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த வீராங்கனைகள் இந்தத் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இன்று நடந்த காலிறுதிப் போட்டியில், தமிழகத்தின் அன்னை தெரசா பல்கலைக்கழகத்துக்கும், பிஹார் மாநிலம் தர்பாங்கா பல்கலைக்கழகத்துக்கும் இடையே நடைபெற்றது.

இந்தப் போட்டியின் போது எதிரணி வீராங்கனைகள் ஃபவுல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால், தமிழக வீராங்கனைகள் நடுவரிடம் முறையிட்டுள்ளனர். ஆனால், நடுவர் தமிழக வீராங்கனைகளையும், பயிற்சியாளரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு கைக்கலப்பு ஏற்பட்டு, பயிற்சியாளரை காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து அந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்டது வேதனை அளிப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கூறியதாவது; பஞ்சாபில் தமிழக கபடி விளையாட்டு வீராங்கனைகள் தாக்கப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது. அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் தமிழக அரசு உடனே செய்ய வேண்டும். காயமடைந்த வீராங்கனைகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பிரச்சனைகள் என்ன என்று கண்டறிந்து அவர்கள் சென்றிருக்கும் பணி சிறப்பாக அமைய பக்கபலமாக இருந்து அவர்கள் பத்திரமாக திரும்புவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post பஞ்சாபில் தமிழ்நாடு கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது: தமிழிசை சவுந்தரராஜன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Kabaddi ,Punjab ,Tamilisai ,Soundararajan ,Chennai ,2024-2025 Inter-University Women's Kabaddi Tournament ,Gurukashi University ,Dinakaran ,
× RELATED பஞ்சாபில் தாக்கப்பட்ட தமிழ்நாடு கபடி...