நன்றி குங்குமம் டாக்டர்
தமிழில் 2013-இல் பத்மராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாசாணி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சிஜா ரோஸ். ஆனால், 2016-இல் வெளியான ‘றெக்க’ படத்தின் ‘கண்ணம்மா… கண்ணம்மா…’ பாடலே தமிழ் ரசிகர்களை இவரை திரும்பி பார்க்க வைத்தது. அதன்பின்னர், ‘பைரவா’, ‘கசட தபற’, ‘உடன்பிறப்பே’ போன்ற குறிப்பிட்ட சில படங்களில் நடித்தவர், ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் ‘தி ஸ்மைல் மேன்’ என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரியாகி இருக்கிறார். சிஜா ரோஸ் தனது ஃபிட்னெஸ் குறித்து பகிர்ந்து கொண்டவை:
வொர்க் அவுட்ஸ்: என் குடும்பத்தில் பெரிய சினிமா பேக்ரவுண்ட் கிடையாது. அதனால், சிறு வயதில் ஜிம் போகிற பழக்கம் எல்லாம் இல்லாமல்தான் இருந்தேன். ஆனால், எப்போது சினிமாவுக்குள் வந்தேனோ அதுமுதல் ஃபிட்னெஸில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டேன். காரணம், நமது தோற்றத்தைப் பொருத்துதான் கேரக்டர் அமையும் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன். எனவே, என்னை இளமையா வச்சுக்கணும் என்பதில் கவனமாக இருக்கேன். அதனால் டயட், வொர்க்கவுட் என தவறாமல் கடைபிடிச்சுட்டு வர்றேன்.
அந்தவகையில், தினசரி ஒரு மணிநேரம் யோகா செய்வேன். பிறகு ஜிம் சென்று உடற்பயிற்சிகள் செய்வேன். இது தவிர, நடனம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அடிப்படையில் நான் ஒரு பரதநாட்டிய கலைஞர். சிறுவயதிலிருந்தே முறையாக நடனம் கற்றுக்கொண்டேன். தற்போது கதக் பயின்று வருகிறேன். எனவே, தினசரி தவறாமல் ஒரு மணி நேரமாவது நடனப்பயிற்சி செய்து விடுவேன். நடனப்பயிற்சியும் என் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது.
நடனத்திற்கு அடுத்த படியாக எனக்கு பெரிதும் உதவுவது யோகா பயிற்சி. குறைந்தபட்சம் தினசரி அரை மணிநேரமாவது யோகா பயிற்சி செய்துவிடுவேன். யோகா பயிற்சி என் மனதுக்கு அமைதி தருவதோடு, என்னை எந்த சூழ்நிலையிலும் பொறுமையாகவும் சாந்தமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.
டயட்: பொதுவாக நான் பெரிய டயட் எல்லாம் பின்பற்றுவதில்லை. அதேசமயம், ஆரோக்கியமான உணவுகளையே பெரும்பாலும் எடுத்துக்கொள்வேன்.
அந்தவகையில், காலை உணவாக அதிகம் கொழுப்பு இல்லாத பால் ஒரு டம்ளர் அல்லது ஏதாவது ஒரு பழ ஜூஸ் மற்றும் வெஜ் சாண்ட்விச் எடுத்துக்கொள்வேன். மதிய உணவில் ஃப்ரெஷ்ஷான காய்கறிகள், ஏதாவது ஒரு சாலட், கொஞ்சமாக அரிசி சாதம் மற்றும் ஒரு சப்பாத்தி எடுத்துக்கொள்வேன். மேலும், தினசரி தவறாமல் கொஞ்சமாக தயிர் கட்டாயம் இருக்கும். அதுபோன்று மாலை நேரத்தில் காபி, ட்ரை ஃப்ரூட்ஸ் அல்லது சீசனுக்கு ஏற்றவாறு கிடைக்கும் பழங்கள் எடுத்துக்கொள்வேன். இரவில் வெஜிடபிள்ஸ், சப்பாத்தி, ஒரு டம்ளர் பால் இவைதான் எனது ரெகுலர் டயட். இது தவிர, வீட்டில் அம்மா சமைக்கும் உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுவேன்.
பியூட்டி: பொதுவாக, சூட்டிங் நேரத்தைத் தவிர, நான் மேக்கப் செய்து கொள்வதை அவ்வளவாக விரும்புவதில்லை. எனது சொந்த விஷயங்களுக்காக வெளியிடங்களுக்குச் செல்லும்போது, எந்தவித மேக்கப்பும் இல்லாமல்தான் செல்வேன். மற்றபடி எனது இளமையான தோற்றப் பொலிவுக்கு காரணம் தேங்காய் எண்ணெய்தான். தினசரி குளிப்பதற்கு முன்பு அரைமணிநேரம் தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் தடவிக்கொள்வேன். அதுபோன்று எங்களது சமையலிலும் தேங்காய் அதிகளவில் பயன்படுத்துவதால், இயற்கையாகவே என் சருமம் பளபளப்புடன் காணப்படுகிறது.
மேலும், காலை எழுந்ததுமே 1 டம்ளர் தண்ணீர் அருந்திவிட்டுதான், யோகா, தியானப் பயிற்சிகள் மேற்கொள்வேன். அவ்வப்போது தண்ணீர் நிறைய குடிப்பதும் கூட எனது சருமத்தை வறண்டுவிடாமல், ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுவதோடு, சருமத்துக்கு மினுமினுப்பையும் தருகிறது. இது தவிர, எனது தினசரி, மேக்கப் என்றால், சன் ஸ்க்ரீன், மாய்ச்சரைஸ் இவை இரண்டும் கட்டாயமாக இருக்கும். அடுத்தபடியாக காஜல், லிப் பாம் இருக்கும் அவ்வளவுதான்.
தலைமுடி பராமரிப்பு என்றால், உங்களுக்கே தெரியும் கேரளா பெண்கள் எல்லாருக்குமே பெரும்பாலும், தலைமுடி நல்ல வளமாக இருக்கும். அதற்குக் காரணம், தேங்காய் எண்ணெய் அதிகம் பயன்படுத்துவதுதான். எங்கள் வீட்டிலும் அப்படிதான் எல்லாருமே சரும பொலிவுக்கும், தலைமுடிக்கும் அதிகளவில் தேங்காய் எண்ணெயே பயன்படுத்துவோம். சமையலிலும் தேங்காய் எண்ணெய் அதிகளவில் பயன்படுத்துவதும் இதற்கு ஒரு காரணம்.
தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்
The post சிஜா ரோஸ் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்! appeared first on Dinakaran.