பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகேந்திரன், அவரின் மகன் அசுவத்தாமன், பொன்னை பாலு, உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இது தொடர்பான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது . அப்போது, நாகேந்திரன், அவரின் மகன் அஸ்வத்தாமன் ஆகியோர் சிறையில் இருந்து காணொலி மூலம் ஆஜராகியிருந்தனர். வழக்கில் வாதாட வழக்கறிஞர் வைக்காமல் இருந்த 8 பேர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறை தரப்பில் வாதாட மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.ஸ்ரீனிவாஸ் மற்றும் சி எஸ் எஸ் பிள்ளை ஆகியோர் சிறப்பு அரசு குற்றவியல் வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நாகேந்திரன் தரப்பில் வழக்கறிஞர் பாலாஜி ஆஜராகி, கொலை வழக்கு தொடர்பான காவல் துறை அளித்த வழக்கு ஆவணங்கள் 2 லட்சத்து 50 ஆயிரம் பக்கங்கள் இருப்பதாகவும், அதை முறைப்படுத்தாமல் வழங்கி இருப்பதாகவும், மேலும் இது தொடர்பாக காவல்துறை அளித்த பென் டிரைவ் வில் சில பக்கங்களை காணவில்லை எனவும் தெரிவித்தார். ஜாமின் பெறுவதை இழுதடிப்பதற்காக வழக்கு ஆவணங்களை முறைப்படுத்தாமல் வழங்கியும், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை அருகில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக கொண்டு செல்லப்பட்ட வெடிகுண்டு கைமாறியதாகவும் காவல்துறை கட்டுக்கதைகளை கூறி வருவதாக குற்றஞ்சாட்டினார்.
இதன் பின் அனைத்து ஆவணங்களையும் முறைப்படுத்தி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை விரைந்து விசாரிக்க பிப்ரவரி 7ம் தேதிக்குள் அனைவரும் வழக்கறிஞர் வைத்து கொள்ள அறிவுறுத்தினார். இல்லாவிட்டால் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் வழக்கறிஞரை நீதிமன்றம் நியமிக்கும் அதை ஏற்காவிட்டால் வழக்கறிஞர்கள் வைக்காதவர்களை தவிர்த்து விட்டு, வழக்கின் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்து, வழக்கில் கைது செய்யப்பட்ட 27 பேரின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 7ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; அரசுத் தரப்பில் வாதாட 2 மூத்த குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனம்! appeared first on Dinakaran.