- ஓம்கரேஷ்வர் ஜோதிர்லிங்கம்
- வைத்தியநாத் திருக்கோயில்
- தேவ்கர்
- ஜார்க்கண்ட்
- தேவ்கர்
- இறைவனின் ஆலயம்
- குப்தா
- பேரரசர்
- ஆதித்ய சேனா குப்தா
- பாபா வைதியநாத் கோயில்
வைத்தியநாத் ஆலயம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேவ்கர் என்ற இடத்தில் உள்ளது. “தேவ்கர்” என்றால் இறைவனின் வீடு என்று பொருள் இந்த ஆலயம் எட்டாம் நூற்றாண்டில் கடைசி குப்தப் பேரரசன் ஆதித்ய சேனா குப்தா ஆட்சியில் பிரபலமானது. பாபா வைத்தியநாத் ஆலயம் என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தோடு இந்த ஊரில் 21 கோயில்கள் உள்ளன. பார்வதி, விநாயகர், காலபைரவர், அனுமான், ராம – லட்சுமணர்கள், சீதாதேவி, காளி, அன்னபூர்ணா, லட்சுமி நாராயண கோயில்களும் உண்டு. ஆலயம் கூம்பு வடிவில் பிரமிடு போன்ற அமைப்பில் உள்ளது. இறைவனுக்கு எதிரே பெரிய நந்தியும், சிவபெருமான் மலையும் உள்ளது. ராமாயணத்தோடு இணைக்கப்பட்டுள்ளது இலங்கை மன்னன் ராவணன் சிறந்த சிவபக்தன். அவன் தனக்கு மிகப் பெரிய வரத்தை வேண்டி சிவபெருமானைக் குறித்து தவம் செய்தான். இந்த தவத்தை அவன் மிக உக்கிரமமாகச் செய்தான்.
ராவணன் வைத்த லிங்கம்
எப்படி என்று சொன்னால் தசமுகனான (10 தலைகளை உடைய) ராவணன் தன்னுடைய தலைகள் ஒவ்வொன்றாக எடுத்து சமர்ப்பணமாக யாக ஆஹுதியில் சிவபெருமாருக்கு அளித்தான். இந்தத் தவத்தை எண்ணி மெச்சிய சிவபெருமான், ராவணனுக்குக் காட்சி தந்து, அவன் விரும்பிய வரத்தை அளித்ததோடு அவனுக்கு ஏற்பட்ட காயங்களை தானே மருத்துவனாக நின்று குணப்படுத்தியதால், சிவபெருமானை வைத்தியநாதர் என்று அழைக்கின்றார்கள்.மற்றொரு கதையும் உண்டு, அதுவும் ராவணன் சம்பந்தப்பட்ட கதைதான். தன்னுடைய நகரமான இலங்கையை எவராலும் வெல்லப்பட முடியாத நகரமாக மாற்ற எண்ணி சிவனிடம் ஒரு வரம் கேட்டான். அவர் ஒரு லிங்கத்தைத் தந்து இந்த லிங்கத்தை நீ எங்கும் வைக்காமல் உன்னுடைய நகரில் ஸ்தாபித்தால் நீ நினைத்தது நிறைவேறும் என்றார். அவன் அந்த லிங்கத்தை எடுத்துக் கொண்டு வேகவேகமாக இலங்கையை நோக்கி வந்தான். இதை அறிந்த தேவர்கள் இவனுடைய இந்தச் செயலை எப்படியாவது தடுத்து நிறுத்தினால் தவிர தேவர்களுக்கு விபரீதம் ஏற்படும் என்று நினைத்து வருண பகவானை வேண்டினர். வருண பகவான் ராவணனின் வயிற்றில் புகுந்து சிரமப்படுத்தினார். இதனால் ராவணன் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த லிங்கத்தை ஒரு அந்தணர் கையில் கொடுத்துவிட்டு தன் வயிற்றின் உபாதையை நீக்கிக் கொள்ளச் சென்றான்.
அந்த அந்தணரோ, லிங்கத்தை கீழே வைத்துவிட்டார். அதிர்ச்சி அடைந்த ராவணன் அதை
எப்படியாவது பெயர்த்து எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று முயற்சித்தான். அவருடைய முழு பலத்தைக் கொண்டு முயற்சித்தும் அந்த லிங்கத்தை அசைக்க முடியவில்லை. வேறு வழி இன்றி அவன் அதை வணங்கி அதே இடத்தில் விட்டுவிட்டு இலங்கைக்குச் சென்றான். அந்த இடம்தான் இப்பொழுது உள்ள லிங்கம் வைக்கப்பட்ட இடம். இந்த ஆலயம் சக்தி பீடமாகவும் விளங்குகின்றது.
சிறப்புகள்
இந்த ஆலயத்தை உள்ளூரில் வைத்தியநாத் தாம் (தாம் என்றால் கோயில்) என்று அழைக்கிறார்கள். இங்கு பக்தர்கள் தாங்களாகவே ஜோதிர்லிங்கத்தின் மீது நீரால் அபிஷேகம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு ஜூன் ஆகஸ்ட் மாதங்களிலும் மிகப் பெரிய விழா (சிரவண விழா) நடைபெறுகின்றது. மகாசிவராத்திரியில் மக்கள் வெள்ளம் கடல் அலை போல் திரண்டு வருகிறது. அன்று இரவு முழுதும் சிவபுராணத்தைப் படித்து இந்த வைத்தியநாதரை வணங்குகின்றார்கள். வடநாட்டில் இந்த கோயிலுக்கு கங்கை நீரை சுமந்து கொண்டு பல கிலோமீட்டர் தூரம் நடந்து பாதயாத்திரை வந்து தாங்கள் கொண்டு வந்த கங்கை நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்கின்ற பக்தர்கள் உண்டு.
தேவ்கரிலிருந்து 108 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நகரமான பீகார் மாநிலத்திலுள்ள சுல்தான்கஞ்ச்சிலிருந்து கங்கை நதியின் நீரைக் கொண்டுவந்து இங்குள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வர். அவர்கள் இரு செம்புகளில் நீரைக்கட்டிக் காவடியாக வெறுங்காலுடன் நடந்துவந்து வழிபடுவர். வைத்தியநாதரை வழிபட்ட பின்னர் அடியார்கள் தும்கா மாவட்டத்திலுள்ள பசுகிநாதர் கோயிலுக்குச் சென்று தரிசிப்பர். இந்த சிவலிங்கத்தை மனத்தூய்மையோடு வணங்கினால் எந்த விதமான நோய் நொடியும் இன்றி ஆரோக்கியமாக வாழலாம் என்ற நம்பிக்கை உண்டு. சிவபெருமானின் இந்த இடத்தை சித்த பூமி என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன.
இந்தத்தலமா, வேறு இருக்கிறதா?ஆதி சங்கராச்சாரியாரின் பன்னிரு ஜோதிர்லிங்கத் துதியில் அவர் வைத்தியநாத ஜோதிர்லிங்கத்தைப் பின்வரும் பாடலினால் போற்றிப் பாடியுள்ளார்.
“பூர்வோத்தரே பிரஜ்வாலிகா நிதனே
சதா வசந்தம் கிரிஜா சமேதம்
சுராசுராராதித பாதபத்மம்
வைத்யநாதம் தமகம் நமாமி’’
எனினும், துவாதசலிங்க ஸ்மரணம் எனும் நூலில் உள்ள பின்வரும் செய்யுள் `பராலியம் வைத்தியநாதம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள பரளி நகரிலுள்ள வைத்தியநாதர் கோயிலே பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் ஒன்று என்றும் கருதப்படுகிறது.
“சௌராஷ்ட்ரே சோமநாதஞ்சே சைலே மல்லிகார்ஜுனம்
உஜ்ஜயின்யா மகாகாளம் ஓங்காரமமலேஸ்வரம்
பரல்யாம் வைத்யநாதஞ்ச தாகின்யாம் பீம சங்கரம்
சேது பந்தேது ராமேசம், நாகேசம் தாருகாவனே
இமாலயேது கேதாரம், கிருஷ்ணேசஞ்ச சிவாலயே
ஏதானி ஜோதிர்லிங்கானி, சாயம் ப்ராதா பரேன்னரகா
சப்த ஜன்ம க்ருதம் பாபம், ஸ்மரணேன விநஸ்யதி’’
ஆகவே வைத்தியநாத ஜோதிர்லிங்கம் உள்ள இடமானது சர்ச்சைக் குரியதாக ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உரிமை கோரப்படுவதாக உள்ளது. அந்த இடங்கள் ஆவன;
1. வைத்தியநாதர் கோயில், தேவ்கர், ஜார்கண்ட்.
2. வைத்தியநாதர் கோயில், பரளி, மகாராட்டிரம்.
3. பைஜ்நாத் கோயில், பைஜ்நாத், இமாச்சலப் பிரதேசம்.
கோயில் பூஜை நேரம்
கோயில் காலை 4 மணி முதல் பிற்பகல் வரை திறந்திருக்கும். மாலை 6 மணி முதல் 9 மணி வரை திறந்திருக்கும். காலை ஆரத்தி 4 மணிக்கும், மதியம் 12 மணிக்கும், மாலை ஆரத்தி 6 மணிக்கும் நடைபெறும்.
The post 5.ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் appeared first on Dinakaran.