புதுச்சேரி, ஜன. 24: எல்லைப்பகுதிகளில் அதிகரிக்கும் குற்றங்ளை தடுக்க இருமாநில போலீசார் ஒருங்கிணைந்து ரோந்து பணி மேற்கொள்வது என்று புதுச்சேரி, தமிழக காவல்துறை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு, புதுச்சேரி மாநில காவல்துறை இடையே பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையாக வீடியோ கான்பரன்சிங் முறையில் இரு மாநில காவல்துறை அதிகாரிகள் கூட்டம் காவல்துறை தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. டிஜிபி ஷாலினி சிங் உத்தரவின் பேரில் ஐஜி அஜித்குமார் சிங்லா தலைமையில் டிஐஜி சத்திய சுந்தரம், சீனியர் எஸ்பிக்கள் கலைவாணன், பிரவீன்குமார் திரிபாதி, நாரா சைத்தன்யா, லட்சுமி சவுஜன்யா, எஸ்பிக்கள் வம்சிதரரெட்டி, ரகுநாயகம், பக்தவச்சலம், ஜிந்தாகோதண்டராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதேபோல் தமிழகத்தில் விழுப்புரம் சரக டிஐஜி திஷா மித்தல், விழுப்புரம் எஸ்பி சரவணன், கடலூர் எஸ்பி ஜெயக்குமார், நாகப்படினம் எஸ்பி அருண் கபிலன், திருவாரூர் எஸ்பி கருண் கரட் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பல்வேறு முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குடியரசு தினத்துக்கான கூடுதல் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான உத்திகள் குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்தனர். குடியரசுதின விழாவை முன்னிட்டு மாநிலங்களுக்கு இடையேயான எல்லை சோதனைச் சாவடிகளில் கூட்டு நடவடிக்கை எடுப்பது, உளவுத்துறை தகவல்களை பகிர்ந்து கொள்வது, அச்சுறுத்தல்களைத் தடுக்க ஒருங்கிணைந்த ரோந்து பணிகளை மேற்கொள்வது தொடர்பாக பேசப்பட்டது. மாநிலங்களுக்கு இடையேயான குற்றவாளிகளின் செயல்பாடுகள், நடமாட்டம் மற்றும் கூட்டாளிகளின் நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை அடிக்கடி இருமாநில போலீசாரும் பரிமாறிக் கொள்ள இது போன்ற கூட்டம் உதவியாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கூட்டு முயற்சியானது, மாநில எல்லைகளில் செயல்படும் தொடர் குற்றச்சம்பவங்களை தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதிகரித்து வரும் போதைப்பொருள் விநியோகிப்பதை தடுப்பது, போதைப்பொருள் குற்றவாளிகள் மற்றும் விநியோகச் சங்கிலிகள் பற்றிய உளவுத் தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை குறித்தும் அதனை எவ்வாறு தடுக்கலாம் என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து கைது செய்வதில் அதிகாரிகள் கூட்டு முயற்சியில் ஈடுபடவும் முடிவு செய்யப்பட்டது. மாநில எல்லைகளைத் தாண்டி தப்பிச்செல்ல முயற்சிக்கும் குற்றவாளிகள் கண்டறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பது, டிஜிட்டல் தளங்கள் மூலம் தகவல் பகிர்வு மற்றும் நுண்ணறிவு பரிமாற்றம் செய்வதை அதிகரிப்பது, எல்லைப் பகுதிகளில் கூட்டுச் செயல்பாடுகள்,
ஒருங்கிணைந்த ரோந்துப் பணியின் மூலம் குற்றசம்பவங்களை குறைப்பது, தேடப்படும் குற்றவாளிகளை கைது செய்ததற்கான ஒத்துழைப்பு அதிகரிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதேபோன்று அவ்வப்போது வீடியோ கான்பரன்சிங் முறையில் இருமாநில காவல்துறை அதிகாரிகள் சந்தித்து பேசி ஒத்துழைப்பு நல்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. புதுச்சேரி காவல்துறை அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக தமிழ்நாட்டு காவல்துறையுடன் நெருக்கமாக பணியாற்ற தயாராக உள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு கூட்டம், அனைவருக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்கவும், தொழில்நுட்பம் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உறுதியை தருவதாகவும் புதுச்சேரி ஐஜி அஜித்குமார் சிங்லா கூட்டத்தில் தெரிவித்தார்.
The post எல்லைப்பகுதிகளில் அதிகரிக்கும் குற்றங்கள்; இரு மாநில போலீசார் ஒருங்கிணைந்து ரோந்து பணி: புதுச்சேரி- தமிழக காவல்துறை கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.