ஈரோடு, ஜன.24: ஈரோடு மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் மீறினால் கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள தொழில் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கடைகளில், இந்த தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதுதொடர்பாக, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்தபாடில்லை. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பதோடு, சாலையோரங்களில் மேயும் கால்நடைகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
இவை தவிர, கடைகள் மற்றும் பொதுமக்களால் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், சாக்கடை கால்வாய் மற்றும் மழை வடிகாலில் குவிந்து, சுகாதாரச் சீர்கேடு ஏற்படுத்தி வருகிறது. எனவே, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில், உரிய ஆய்வு மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அபராதம் விதிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு appeared first on Dinakaran.