×

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணி

சேலம், ஜன.24: சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார். நாட்டின் 76வது குடியரசு தினவிழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் 26ம் தேதி காலை, குடியரசு தினவிழா நடத்தப்படவுள்ளது. கலெக்டர் பிருந்தாதேவி, தேசிய கொடியை ஏற்றி வைக்கவுள்ளார். இவ்விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது: நெடுஞ்சாலைத்துறை சார்பில் பொதுமக்கள், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்கள் உள்ளிட்டோருக்கு உரிய இருக்கை வசதிகள் அமைத்திடவும், மின்சார வாரியம் சார்பில் தடையில்லா மின்சாரம் வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடத்தில் காவல்துறை மூலம் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளவும், மாநகராட்சி மூலம் குடிநீர் வசதிகள், தற்காலிக சுகாதார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 1,200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு தேவையான நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறை எடுத்துள்ளது.

மேலும், சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு காவலர் பதக்கங்களும், அதேபோன்று சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது. பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிட வருவாய்த்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த குடியரசு தின விழாவை சிறப்பாக கொண்டாட அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து அனைத்து பணிகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார். இக்கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜன், சேலம் ஆர்டிஓ அபிநயா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) மயில், மாவட்ட வழங்கல் அலுவலர் கணேஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

The post சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணி appeared first on Dinakaran.

Tags : Republic Day ,Salem Gandhi Stadium ,Salem ,Mahatma Gandhi Stadium… ,Dinakaran ,
× RELATED டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற கல்லூரி மாணவருக்கு பாராட்டு