சென்னை: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், ரூ.10 கோடி மதிப்பில் பெண்களுக்கான 39 உடற்பயிற்சிக் கூடங்கள் கட்டும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி மேயர் 2024-25ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெண்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்டு, முதற்கட்டமாக ரூ.10 கோடி மதிப்பில் பெண்களுக்கான 39 உடற்பயிற்சிக் கூடங்கள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, சென்னை மாநகராட்சியில் ஆண்களுக்கான உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சிக் கூடங்கள் ஏதுமில்லை என்ற குறையை போக்கிடும் வகையிலும், பெண்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்டும் மாநகராட்சிப் பகுதிகளில் பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, மேயர் 2024-25ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெண்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், முதற்கட்டமாக ரூ.9.97 கோடி மதிப்பில் பெண்களுக்கான 39 உடற்பயிற்சிக் கூடங்கள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, 22 பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், 4 உடற்பயிற்சிக் கூடப் பணிகள் தொடங்கும் நிலையில் உள்ளன. 13 உடற்பயிற்சிக் கூடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவற்றில் திருவொற்றியூர் மண்டலம், 10வது வார்டுக்கு உட்பட்ட பூந்தோட்டம் தெருவில் ரூ.35.30 லட்சம் மதிப்பிலும், திரு.வி.க.நகர் மண்டலம், 68வது வார்டுக்கு உட்பட்ட ஜவஹர் நகர், 2வது தெருவில் ரூ.43 லட்சம் மதிப்பிலும், அம்பத்தூர் மண்டலம், 85வது வார்டுக்கு உட்பட்ட ரயில் விஹார் பகுதியில் ரூ.39.20 லட்சம் மதிப்பிலும், 87வது வார்டுக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, 2வது தெருவில் ரூ.39.20 லட்சம் மதிப்பிலும், 90வது வார்டுக்கு உட்பட்ட வெல்கம் காலனி, முதல் தெருவில் ரூ.25 லட்சம் மதிப்பிலும்,
92வது வார்டுக்கு உட்பட்ட மங்கள் ஏரி பூங்காவில் ரூ.25 லட்சம் மதிப்பிலும், 80வது வார்டுக்கு உட்பட்ட தாங்கல் ஏரி பூங்காவில் ரூ.25 லட்சம் மதிப்பிலும், 82வது வார்டுக்கு உட்பட்ட ரெட்ஹில்ஸ் சாலை, டாடா கம்யூனிகேஷன் பூங்காவில் ரூ.25 லட்சம் மதிப்பிலும், 83வது வார்டுக்கு உட்பட்ட மதனங்குப்பம், தாங்கல் ஏரி பூங்காவில் ரூ.25 லட்சம் மதிப்பிலும், 81வது வார்டுக்கு உட்பட்ட மதானங்குப்பம், கிருஷ்ணாபுரம் பூங்காவில் ரூ.25 லட்சம் மதிப்பிலும் உடற்பயிற்சி கூடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதேபோல், கோடம்பாக்கம் மண்டலம், 128வது வார்டுக்கு உட்பட்ட இளங்கோ நகர் பிரதான சாலையில் ரூ.38.30 லட்சம் மதிப்பிலும், தண்டையார்பேட்டை மண்டலம், 38வது வார்டுக்கு உட்பட்ட பட்டேல் நகரில் ரூ.35 லட்சம் மதிப்பிலும், 47வது வார்டுக்கு உட்பட்ட சுகந்திரபுரம், முதல் தெருவில் ரூ.26 லட்சம் மதிப்பிலும், ராயபுரம் மண்டலம், 53வது வார்டுக்கு உட்பட்ட பி.பி.அம்மன் கோயில் தெருவில் ரூ.9.93 லட்சம் மதிப்பிலும், படவேட்டம்மன் கோயில் தெருவில் ரூ.9.93 லட்சம் மதிப்பிலும், தேனாம்பேட்டை மண்டலம், 110வது வார்டுக்கு உட்பட்ட காமராஜபுரம் முதல் தெருவில் ரூ.18.95 லட்சம் மதிப்பிலும் உடற்பயிற்சி கூட பணிகள் நடந்து வருகிறது.
அண்ணாநகர் மண்டலம், 95வது வார்டுக்கு உட்பட்ட திருநகர் பூங்காவில் ரூ.4.5 லட்சம் மதிப்பிலும், 97வது வார்டுக்கு உட்பட்ட வெள்ளாள தெரு பூங்காவில் ரூ.4.5 லட்சம் மதிப்பிலும், 101வது வார்டுக்கு உட்பட்ட புல்லா அவென்யூ ஸ்கேடிங் பூங்காவில் ரூ.5 லட்சம் மதிப்பிலும், 103வது வார்டுக்கு உட்பட்ட டவர் பூங்காவில் ரூ.5 லட்சம் மதிப்பிலும், சோழிங்கநல்லூர் மண்டலம், 196வது வார்டுக்கு உட்பட்ட கண்ணகி நகர், 12வது பிரதான சாலையில் ரூ.40 லட்சம் மதிப்பிலும், அடையாறு மண்டலம், 170வது வார்டுக்கு உட்பட்ட பள்ளிப்பட்டு பிரதான சாலையில் ரூ.40 லட்சம் மதிப்பில் என மொத்தம் ரூ.5.44 கோடி மதிப்பில் பெண்களுக்கான 22 புதிய உடற்பயிற்சிக் கூடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், ஆலந்தூர் மண்டலம், 159வது வார்டுக்கு உட்பட்ட காமராஜர் தெருவில் ரூ.8.24 லட்சம் மதிப்பிலும், ராயபுரம் மண்டலம், 56வது வார்டுக்கு உட்பட்ட ஆசீர்வாதபுரத்தில் ரூ.11.75 லட்சம் மதிப்பிலும், பெருங்குடி மண்டலம், 181வது வார்டுக்கு உட்பட்ட ஜகநாதன் தெருவில் ரூ.17.18 லட்சம் மதிப்பிலும், தண்டையார்பேட்டை மண்டலம், 44வது வார்டுக்கு உட்பட்ட காந்திஜி முதல் தெருவில் ரூ.38.26 லட்சம் மதிப்பில் என மொத்தம் ரூ.75.43 லட்சம் மதிப்பில் 4 உடற்பயிற்சிக் கூடங்கள் கட்டும் பணிகள் தொடங்கும் நிலையில் உள்ளன.
திருவொற்றியூர் மண்டலம், 1வது வார்டுக்கு உட்பட்ட எண்ணூர் விரைவு சாலையில் ரூ.35.3 லட்சம் மதிப்பிலும், மணலி மண்டலம், 19வது வார்டுக்கு உட்பட்ட எம்.எம்.டி.ஏ. 2வது பிரதான சாலை பூங்காவில் ரூ.93.55 லட்சம் மதிப்பிலும், தண்டையார்பேட்டை மண்டலம், 48வது வார்டுக்கு உட்பட்ட கன்னிக் கோயில் தெருவில் ரூ.25 லட்சம் மதிப்பிலும், அம்பத்தூர் மண்டலம், 91வது வார்டுக்கு உட்பட்ட மேற்கு முகப்பேர், முதல் பிளாக் பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.3.78 கோடி மதிப்பில் பெண்களுக்கான 13 உடற்பயிற்சிக் கூடங்கள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.
* இந்த உடற்பயிற்சி கூடங்களில் டிரெட்மில், சைக்கிளிங் மற்றும் இஎப்எக்ஸ் இயந்திரங்கள், ஹைடிராலிக் வெயிட் லிப்டிங் மெஷின் என அனைத்து உபகரணங்கள் மற்றும் குடிநீர் வசதி, பாதுகாவலர்கள் என அடிப்படை வசதிகளும் இந்த உடற்பயிற்சிக் கூடங்களில் அமைய உள்ளது.
The post உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.10 கோடி மதிப்பில் மகளிருக்கான 39 உடற்பயிற்சி கூட பணி தீவிரம்: மாநகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.