×

பொலம்பாக்கம் ஊராட்சியில் பழுதடைந்த சமுதாய கூடம்: அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர கோரிக்கை

மதுராந்தகம்: பொலம்பாக்கம் ஊராட்சியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு சேதமடைந்த சமுதாயக் கூட கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக சமுதாயக்கூடம் கட்டித் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவ்வாறு கட்டித்தரும் பட்சத்தில் அதனால் 10 கிராமங்களை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவார்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியத்தில் பொலம்பாக்கம் ஊராட்சி உள்ளது. இங்கு, 900 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 4,500 பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பொலம்பாக்கம் கிராமத்தின் சமுதாயக்கூடம் சித்தாமூர் ஜங்ஷன் பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சமுதாயக்கூட கட்டிடம் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், பலத்த சேதமடைந்து மழை பெய்தால் மழைநீர் சமுதாயக்கூடத்திற்குள் செல்வதால் அங்கு நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறாமல் கடந்த 10 ஆண்டுகளாக பூட்டியே கிடைக்கிறது. அவ்வப்பொழுது அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் மட்டும் வெளியில் சாமினா பந்தல் அமைத்து நடைபெற்று வந்தது. ஒரு சில மருத்துவ முகாம்களும் நடைபெற்று வந்தன. மேலும், திருமணம், மஞ்சள் நீராட்டு, பிறந்தநாள் உள்ளிட்ட விழாக்களை நடத்த முடியாமல் அதன் அருகில் உள்ள தனியார் மண்டபங்களில் வாடகை எடுத்து இங்குள்ள எழை, எளிய மக்கள் இல்ல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இங்குள்ள தனியார் திருமண மண்டபங்கள் சுமார் ரூ35 ஆயிரத்தில் ஆரம்பித்து நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு ரூ70 ஆயிரம் வரை செலவழித்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

இதனால் ஏழை, எளிய மக்கள் நிகழ்ச்சிகளை கடன் வாங்கி நடத்த வேண்டிய சூழலில் உள்ளனர். எனவே இந்த கிராமத்தில் உள்ள சமுதாயக் கூட கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய சமுதாயக்கூடம் அமைத்து தர வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, பயன்படுத்த முடியாத அந்த சமுதாய கூட கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக வணிக வளாகத்துடன் கூடிய சமுதாய கூட கட்டிடம் கட்டித்தர வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் மாவட்ட கலெக்டருக்கு கடிதம் வழங்கியுள்ளார்.

சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
சித்தாமூர் ஜங்ஷனில் பொலம்பாக்கம் சமுதாயக்கூடம் உள்ளதால் அனைத்து தரப்பினரும் தங்களது நிகழ்ச்சிகளை நடத்த விரும்புவார்கள். பொதுமக்களுக்கு வந்து செல்ல வசதியான இடமாகவும் உள்ளது. எனவே, இந்த பழுதடைந்த சமுதாய கூடத்தை அகற்றிவிட்டு ஏழை எளியோர் பயன்படுத்தும் விதமாக புதிய சமுதாய கூடத்தை விரைந்து கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

சேதம் அடைந்த…
சமுதாய கூடத்தில் உள்ள மேற்கூரை சிமென்ட் ஷீட் ஓடுகள் உடைந்துள்ளன. மேலும், தரைப்பகுதி சேதமடைந்துள்ளது. ஜன்னல் மற்றும் கதவுகள் உடைந்துள்ளன.மேலும், சமையல் செய்யும் அறையும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால்தான் தற்போது சமுதாய கூடம் பயன்படுத்த முடியாமல் உள்ளது.

பயன்பெறும் கிராமங்கள்
சமுதாயக்கூடம் அமைந்துள்ள இடத்தில் அருகில் பொலம்பாக்கம், சித்தாமூர், மழுவங்கரணை, சரவம்பாக்கம், தொன்னாடு, நீர்பெயர், முகுந்தகிரி, பழவேலி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராங்களை சேர்ந்த ஏழை, எளிய கிராம மக்கள் தான் சமுதாய கூட்டத்தை அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். தற்போது, பழுதடைந்ததால் அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

The post பொலம்பாக்கம் ஊராட்சியில் பழுதடைந்த சமுதாய கூடம்: அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Polambakkam panchayat ,Madhurantakam ,Polambakkam ,Dinakaran ,
× RELATED வருவாய்த்துறை சார்பில் கிளை சிறைக்கு உபகரணங்கள்