நன்றி குங்குமம் டாக்டர்
அவரையில் பல வகைகள் உண்டு. அவற்றுள் பட்டை அவரை, சிகப்பு கோடிட்ட அவரை, யானை காது அவரை போன்றவையே மார்க்கெட்டில் அதிகளவில் புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் நமது தமிழகத்தில் ஒரு காலத்தில் புழக்கத்தில் இருந்த பாரம்பரியமான பலவகையான நாட்டு ரக அவரை வகைகள் காலப்போக்கில் காணாமல் போய்விட்டது.
உதாரணமாக, தம்பட்டை அவரை, கோழி அவரை, முக்குத்தி அவரை, சீனி அவரை, காட்டவரை, பூனைக்கால் அவரை, சீமை அவரை, ஆட்டுக் கொம்பு அவரை என ஏராளமான வகைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில், ஒன்றுதான் சிறகு அவரை. ஆனால், வெளிநாடுகளில் விங்க்ட் பீன்ஸ் என்ற பெயரில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. தற்போது, மீண்டும் இந்த சிறகு அவரை, புழக்கத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. சிறகு அவரையில் இருக்கும் சத்துக்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டசத்துக்களையும் சரியான அளவில் கொண்டது சிறகு அவரை. வைட்டமின் A, வைட்டமின் C, கால்சியம் மற்றும் இரும்பு சத்து கொண்டது. மற்ற கொடி காய்கறிகளை விட, இருபது சதவிகித அதிக புரதம் கொண்ட காய்கறி சிறகு அவரையாகும். இலைகள் மற்றும் பூக்களில் 15% புரதம் உள்ளது. விதைகளில் 35% புரதமும் 18% கொழுப்பு சத்தும் உள்ளது.
கருவுறும் தாய்மார்களுக்கு தேவையான போலிக் அமிலம் சிறகு அவரையில் அதிகம் உள்ளது. அதனால் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்ற சிறந்த காய்கறியாகும். மேலும், கருவில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகள், முதுகுத் தண்டு வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகள் போன்றவற்றை தடுத்து, ஆரோக்கியமாக உருவாவதற்கும் சிறகு அவரை உதவுகிறது. புரோட்டின் சத்து குறைபாடுள்ளவர்களுக்கு, சிறகு அவரை சிறந்த வரபிரசாதமாகும். அதிகளவில் புரோட்டின் சத்துக்கள் சிறகு அவரையில் உள்ளது. இதில் உள்ள இரும்புச் சத்து ரத்த சிவப்பு அணுக்கள் உருவாக உதவுகின்றது.
சிறகு அவரையின் அனைத்துமே உண்ணக் கூடியது. காயில், புளிக்குழம்பு, சாம்பார், பொரியல், ஊறுகாய் போன்றவற்றை செய்யலாம். இதன் முற்றிய விதைகளை மொச்சை மாதிரி ஊற வைத்து குழம்பாகவோ, சுண்டலாகவோ செய்யலாம். இதன் இலைகளை கீரையைப் போன்று சமைக்கலாம். பூக்களை சாலட் செய்து உண்ணலாம். இதன் வேர்களில் ஓடும் கிழங்குகளையும் அவித்து சாப்பிடலாம். நல்ல ஊட்டசத்து கொண்ட உணவாக இது திகழ்கிறது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், சர்க்கரை நோயாளிகளுக்கும் மற்றும் மலச்சிக்கல் நோய்க்கும் இது மருந்தாகிறது. மேலும், உடலில் சேர்ந்த கொழுப்புச் சத்தை வெளியேற்றவும் வகை செய்கிறது. இதனால் இதய நாளங்களில் அடைப்புகள் ஏற்படாமல் இதயம் சீராகச் செயல்படுவதற்கும் ஏதுவாகின்றது.
The post சிறகு அவரையின் பயன்கள்! appeared first on Dinakaran.