திருமலை: நடத்தை சந்தேகத்தால் மனைவியை வெட்டிக் கொன்று, துண்டு துண்டாக்கி, உடலை குக்கரில் வேகவைத்து கால்வாயில் வீசிய சைக்கோ கணவனான ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குருமூர்த்தி (39), முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி வெங்கடமாதவி (35). ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். குருமூர்த்தி ராணுவ பணியில் இருந்து விலகி தெலங்கானா மாநிலம் ஐதராபாத் கஞ்சன்பார்க் பகுதியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டுக்கழகத்தில் காவலராக பணியில் சேர்ந்தார். இதனால் தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் சில்லலகூடா பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் மனைவியின் நடத்தை மீது குருமூர்த்திக்கு சந்தேகம் இருந்துள்ளது. இதனால் மனைவியை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்துள்ளார். கடந்த சங்கராந்தி (பொங்கல்) பண்டிகை விடுமுறையொட்டி தனது பிள்ளைகளை அங்குள்ள மாமியார் வீட்டுக்கு குருமூர்த்தி அனுப்பினார். கடந்த 16ம் ேததி முதல் வெங்கடமாதவியின் செல்போனுக்கு அவரது பெற்றோர் மற்றும் பிள்ளைகள் ெதாடர்புகொண்டபோது `சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த வெங்கடமாதவியின் பெற்றோர், மருமகன் குருமூர்த்தியிடம் கேட்டனர். அதற்கு அவர், `உங்கள் மகள் அடிக்கடி யாரிடமோ செல்போனில் பேசி வந்தார். இதை கேட்டும் திருந்தவில்லை. தற்போது வீட்டில் இல்லை. அவர் யாருடனாவது சென்றிருக்கலாம்’ என கூறியுள்ளார்.
ஆனால், அதை நம்பாத வெங்கடமாதவியின் பெற்றோர், நீர்பேட் போலீஸ் நிலையத்தில் கடந்த 20ம்தேதி புகார் அளித்தனர். இதேபோல் குருமூர்த்தியும் அதே நாளில் போலீசில் தனியாக புகார் அளித்தார். அதில், `எனது மனைவிக்கு வேறு யாருடனோ தொடர்பு உள்ளது. இதனால் அந்த நபருடன் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார்’ என தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். வெங்கடமாதவியின் செல்போனை போலீசார் கைப்பற்றினர். அக்கம் பக்கத்தினரிடமும் போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் கடந்த 16ம்தேதி தம்பதியிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அழுகுரல் கேட்டதாகவும், அதன்பின்னர் வெங்கடமாதவி வெளியே வரவில்லை என்பதும் தெரிய வந்தது. இதனால் குருமூர்த்தி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதே தெருவில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கடந்த 17ம்தேதி இரவு குருமூர்த்தி, தெருவில் நடமாடிய ஒரு நாயை தனது வீட்டுக்கு பிடித்துச்செல்வது தெரிந்தது. இதையடுத்து குருமூர்த்தியிடம் விசாரணை நடத்தினர். அதில் சைக்கோ போன்று மனைவியை கொடூரமாக வெட்டிக்கொன்று துண்டுதுண்டாக்கி, குக்கரில் வேகவைத்து பின்னர் காயவைத்து அதனை தூளாக்கி கால்வாய் மற்றும் ஏரியில் வீசிய அதிர்ச்சி தகவல்கள் அம்பலமானது.
இதுகுறித்து போலீசிடம் குருமூர்த்தி அளித்த வாக்குமூலம்:
மனைவியின் நடத்தை மீது அடிக்கடி சந்தேகம் வந்தது. கடந்த 16ம்தேதி எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்து கத்தியால் மனைவியை வெட்டி கொன்றேன். பின்னர் போலீசிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க சடலத்தை வேறு பாணியில் அப்புறப்படுத்த முடிவு செய்தேன். அதன்படி மனைவியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்தேன். பின்னர் ஹாலிவுட் படங்கள் மற்றும் யூடியூப்பில் சில வீடியோக்களை பார்த்தேன். அதற்கு முன்பு சோதனை முயற்சியாக தெருவில் நடமாடிய நாயை வீட்டுக்கு கொண்டுவந்து அடித்து கொலை செய்து அதன் உடலை துண்டுகளாக்கி குக்கரில் வேகவைத்து காயவைத்தேன்.
பின்னர் அதனை தூளாக்கி கழிவுநீர் கால்வாயில் வீசினேன். அதேபாணியில் எனது மனைவியின் உடல்களை பிரிட்ஜில் இருந்து எடுத்து குக்கரில் வேகவைத்து, பின்னர் காயவைத்து தூளாக்கி கால்வாயில் வீசினேன். பெரிய எலும்புகளை ஏரியில் வீசினேன். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து அவரை அழைத்துச்சென்று ஏாியில் வீசிய எலும்புகளை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து குருமூர்த்தியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post ஆந்திராவில் நடந்த கொடூரம்; மனைவியை வெட்டிக் கொன்று துண்டு துண்டாக்கி உடலை குக்கரில் வேக வைத்த சைக்கோ appeared first on Dinakaran.