தேனி: கள்ளக்காதல் விவகாரத்தில் பைனான்சியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான கொலையாளியை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் உள்ள பிடிஆர் காலனியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (34). இவர், பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். வட்டிக்கு பணம் கொடுத்து தினசரி வசூலித்து வந்துள்ளார். வசூலுக்கு செல்லும்போது, அதே பகுதியைச் சேர்ந்த அனீஸ் (40) என்பவரது மனைவியுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
இதையறிந்த அனீஸ், பிரசாந்தை கண்டித்துள்ளார். ஆனால், அவர் கேட்காமல் தகாத உறவை தொடர்ந்துள்ளார். இதனால், இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை உத்தமபாளையம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் முன்பு பிரசாந்த் தனது டூவீலருடன் நின்றிருந்தார். அப்போது அங்கு சென்ற அனீஸ் தனது மனைவியுடனான தொடர்பை கைவிடச் சொல்லிக்கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது, இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த அனீஸ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரசாந்தை சரமாரியாக வெட்டியுள்ளார். தப்பிப்பதற்காக வெட்டுக்காயங்களுடன் அருகில் உள்ள லாட்ஜுக்குள் பிரசாந்த் ஓடியுள்ளார். ஆனால், அனீஸ் அவரை ஓட, ஓட துரத்தி வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினார். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த நீதிமன்றம் பகுதியில் ஓட, ஓட வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான அனீஸை தேடி வருகின்றனர்.
The post தேனி அருகே இன்று காலை கள்ளக்காதல் விவகாரத்தில் பைனான்சியர் படுகொலை appeared first on Dinakaran.