108 வைணவ திவ்ய தேசங்களில் இரு திவ்ய தேசங்கள் நம்மால் காண இயலாது என்பார்கள். ஒன்று திருபாற்கடல் (107), மற்றொன்று வைகுண்டம் (108). காவிரிப் பாக்கத்தில் திருப்பாற்கடல் என்ற ஆலயம் உள்ளது. அபூர்வமான அத்திமரத்தில் வீற்றிருக்கும்எம்பெருமாள், திருப்பாற்கடல் அத்திரங்கர் என்று அழைக்கப் படுகின்றார். இங்குள்ள மூலவருக்கு திருமஞ்சனம் கிடையாது. வருடத்திற்கு ஒருமுறை தைலக்காப்பு நடைபெறும். அந்த நாளில் பெருமாளின் முகதரிசனம் காண்பவர் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.
சப்தக விமானம்
மந்திர ஒலிக்கு சக்தி உண்டு. அதை சரியாக உச்சரிக்க வேண்டும். ஓம்காரத்தில் சரத்சாரங்கம் என்ற ஒரு வகையான அற்புதமான பீஜ ஒலிகள் உண்டு. இந்த சப்தமானது, அத்திமர சிலாவில் மட்டும் ஒலிக்கும் ஓம்காரம் ஆகும். திருப்பாற்கடல் ஆலய விமானத்தில், சரத் சாரங்க ஓங்கார ஓசை நிறைந்திருக்கும். இதனை, ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அவதரித்த ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகர் அருளிய, “மெய் விரத மான்மியம்’’ என்ற நூலில் எழுதி இருக்கிறார். சாம வேத கானத்தில்வல்லமை பெற்றவை சாரங்கப்பறவைகள். மந்திர ஓசை இடையில் பறவைகளின் இன்னிசையும் ஒலிக்கும். இவ்விமானத்தின் கீழே ஸ்ரீரங்கநாத பெருமாள் வீற்றிருக்கிறார். எப்பொழுதும் வேத மந்திரம் ஒலித்துக்கொண்டே இருப்பதனால், இங்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு சிறப்பான வாழ்வு அமையும் எனக் கூறப்படுகிறது.
சரஸ்வதியின் கோபம்
திருமாலின் நாபி கமலத்தில் தோன்றியவர் பிரம்மா. தன் அகங்காரத்தால் திருமாலை அலட்சியப் படுத்தினார். பின்பு தன் தவறையும் உணர்ந்தார். தன் தீவினை தீர யாகம் செய்ய எண்ணினார். அதற்காகப்பூலோகத்தில் உள்ள காஞ்சிபுரத்திற்கு வந்தார். யாகம் செய்ய துணைவி சரஸ்வதியை அழைத்தார். மனைவியுடன் அமர்ந்து யாகம் செய்வதுதான் சாஸ்திர மரபு. சரஸ்வதி தேவி யாகத்திற்கு உடன்படவில்லை.
எனவே, தன் மற்ற பத்தினிகளான சாவித்திரி, காயத்ரி உடன்கூடி யாகத்தைத் தொடங்கினார். இதனால் சரஸ்வதிதேவி கடும் கோபம்கொண்டு, வேகவதி என்ற நதி ரூபமாகத் தோன்றி யாகத்தை அழித்துவிட முயன்றாள். திருமால், பிரம்மாவின் மீது கருணைகொண்டார். ஓடிவரும் நதியின் வேகத்தைக் கண்டார். பிரம்மாவின் யாகம் பூர்த்தியாக நிறைவேற, ஆதிசேஷன் மீது சயன கோலத்துடன் படுத்து வேகமாக ஓடி வந்த நதியின் வேகத்தைத் தடுத்தார். எம்பெருமாள் கடாட்சத்தினால், சரஸ்வதியின் கோபமும் தணிந்தது.யாகமும் பூர்த்தியானது.
“மெய் விரத மான்மியம்
அன்று நயந்த சுயமேத மாவேள்வி
போன்றவுரை அணங்கு பூம் புனலாய்க் கன்றி வர
வாதிய யனுக் அருள் செய்தவனை யானான்
றாதை அரவனை யான்றான்’’
திருமாலிடம், பிரம்மா தன் பிரார்த்தனை ஏற்று அருள்புரிந்தது போல,இத்தலத்திற்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு நிரந்தரமாக அருள் வழங்க வேண்டும் என வேண்டிநின்றார். இங்கு, க்ஷீராப்திநாதன் (ஸ்ரீரங்கநாதர், அத்திரங்கன்) என்ற பெயருடன் மக்களுக்கு அருள் பாலிக்கின்றார்.
சூறாவளிக் காற்று
அத்திமரங்களும், விசேஷ மரங்களும் சூழ்ந்த காட்டில், சப்த ரிஷிகள் தவம் செய்து கொண்டிருந்தனர். திடீரென்று சூறாவளிக் காற்று வீசியது. காற்றின் வேகத்தைத் தாங்க முடியாமல் ரிஷிகள் தடுமாறினர். மழை கொட்டித் தீர்த்தது. வெள்ளத்தில் சிக்கிய ரிஷிகள், அதில் இருந்து மீள முடியாமல் தவித்தனர். ரிஷிகளால் நித்ய (தினமும்) வேத மந்திரம் ஓதும் பணிகள் எதுவுமே செய்ய முடியவில்லை. எப்படி கடைத்தேறுவது என்று தெரியாமல் விழித்தனர்.
அப்பொழுது, சப்தக விமானத்தில் இருந்து எழுந்த சரத்சாரங்க ஓங்கார சப்த நாதம், ரிஷிகளை ஈர்த்தது. அவர்கள் சப்தக விமான தரிசனம் பெற்று, மாய வெள்ளத்தில் இருந்து கரை சேர்ந்தனர். ரிஷிகளைக்காத்து கரையேற்றச் செய்தது சப்தக சரத் சாரங்க விமானம் ஆகும்.
அதனால் இவ்விடத்திற்கு “திருக்கரை புறம்’’ என்றும் பெயர் ஏற்பட்டது. இது நிகழ்ந்தது ஒரு யுகத்தில், விஷ்ணுவின் புண்ணிய காலத்திலே நடந்தது ஆகும். அன்றிலிருந்து இன்று வரை சப்தரிஷிகள் சப்தமி திதி அன்றும், வேத மந்திரம் ஓதி வழிபடுவதாகக் கூறப்படுகிறது. மாதத்தில் இரண்டு பட்சங்களில் அமாவாசை, பௌர்ணமி திதிகள் மற்றும் ஏழாம் நாள் சப்தமி திதி அன்று சப்தரிஷிகள் வந்து அத்தி சுயம்பு ஸ்ரீரங்கநாத பெருமாளை வணங்குவர். அச்சமயம் பக்தர்கள், இவ்வாலயத்தை ஏழு முறை சுற்றி வந்து வணங்கினால், நமக்கு நல்லது அத்தனையும் கிடைக்கும்.
சித்ரகுப்தனுக்கு பிணியா?
உயிர்களின் கர்மவினைக்கு ஏற்ப பாவ புண்ணியத்தைத் துல்லியமாக கணக்கெழுதி வரும் சித்ரகுப்தன், எமனின் கணக்கர் என்று அழைக்கப்படுவார். பாரபட்சமின்றி உண்மையையே எழுதிவரும் இவருக்கு, ஒரு முறை பிணி (நோய்) ஏற்பட்டது. விதி யாரையும் விட்டு வைப்பது இல்லை. நேரம் வரும் போது அவரவர் பாவக்கணக்குக்கு ஏற்ப, வினை முடிந்துவிடுகிறது. சித்ர குப்தனுக்கு இப்பிணி எப்படி ஏற்பட்டது? ஜீவன்களின் தீவினைக் கணக்குகள் பெருகியது, அவற்றை எழுத வேண்டிய நிலையில் பாவகணக்குகளைப் பார்த்துப்பார்த்து கபாலச்சூடு ஏறி, மித மிஞ்சிய வலியால் துன்பப்பட்டார்.
அவர், பிரம்மாவிடம் என்னுடையகபாலச் சூடு தணிய என்ன வழி? என்று ஆலோசனை கேட்டார். பிரம்மா, சித்ரகுப்தனிடம் பங்குனி மாதம் ரேவதி நட்சத்திரம் கூடிய புண்ணிய காலத்தில், அத்தி ஸ்ரீ ரங்கநாதருக்குத் தைலக்காப்பு நடைபெறும். ஸ்ரீ ரங்கநாதர் மேனியைத் தொட்டுத் தழுவிய தைலத்தைப் பிரசாதமாகப்பெற்று சிரசில் இட்டுக்கொண்டால், உன்னுடைய கபாலச் சூடுவலி தீரும் என்றார்.
சித்ர குப்தன் காவிரிப்பாக்கம் வருதல்
சித்ர குப்தன் எமலோகத்தில் இருந்து திருப்பாற்கடலில் இருக்கின்ற அத்தி ஸ்ரீ ரங்கநாதனை காண பூலோகத்திற்குவந்தார். திருப்பாற்கடல் நாதனை பக்தியோடு பூஜித்தார். அத்திமரத்தினால் ஆன சமித்துக் குச்சிகளை வைத்து ஹோமம் செய்து வணங்கி, அத்தித் தைலத்தை தலையில் தடவிக் கொண்டதால், கர்மம் விலகியது. தலை வலியும் நீங்கியது. அத்தி ஸ்ரீ ரங்கநாதர் காட்சி கொடுத்து, “உனக்கு என்ன வரம் வேண்டும்’’ என்று கேட்டார். “இன்று என் தலைவலி தீர்ந்தது போல, இத்தலத்திற்கு வந்து உம்மையாகப்பக்தியோடு வணங்கும் பக்தர்களின் கர்மவினைகள் நீங்கி, இன்புற அருள்புரிய வேண்டும்’’ என்று கேட்டார்.
“நீ கேட்ட வரத்தைத் தருகிறேன்’’ என்று திருமால் வாக்களித்தார். அத்துடன், மக்கள் பக்தியோடு ஸ்ரீ ரங்நாதனை சேவித்தால், சித்ரகுப்தன், பக்தர்களின் தீவினை பாவக் கணக்குகளை எல்லாம் கரைத்துவிடுவார். மேலும், அத்திமர சமித்துகளைக்கொண்டு ஆஹூதி அளித்தால், நற்சந்ததி தழைக்கும் என்று கோயில் ஸ்தலப்புராணம் கூறுகிறது.
வைகுண்டத்தில் சிறப்புவைகுண்டத்தில் நதிகள், சமுத்திரம்எல்லாம் உண்டு. விரஜா நதி முக்திக்கு முதலிடம் பெற்றது. ஜனமுக்தி சமுத்திரம், பிரபஞ்ச முக்தி சமுத்திரம், பரமார்க முக்தி சமுத்திரங்கள் ஆகும். இதில் மிகவும் முக்கியமானவை, ஸ்ரீ ரங்கநாதரைப் பக்தியோடு கண்ணால் தரிசித்தாலே போதும், பரப்பிரம்ம ஞான தரிசனம் பெற்ற பலனைப் பெறுவர்.
பெண் பிள்ளைகள் மீதுஅதிக பாசம்
பிரதான கோபுரம் வாசல் பக்கத்தில், திட்டுவாசல் வழியாக உள்ளே நுழைந்தால், 24 தூண்களை உடைய மகாமண்டபம் இருக்கிறது. கருவறையை ஒட்டி சென்றால் அர்த்த மண்டபத்தைக் காணலாம். இடப்புறத்தில் தாயார் சந்நதி உள்ளது. ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ ரங்கநாயகி தாயார் எவ்வாறு கம்பீரமான உருவத்துடன் பெரிய பிராட்டியாக காட்சி தருவாரோ, அவரைப் போலவே இங்குள்ள நாச்சியாரும் பன்னிரண்டு கரங்களில், தாமரை மலர்கள் ஏந்தி வலக்கையால் பக்தர்களை வாழ்த்தியும், இடக்கரத்தால் வரத்தையும் தருகின்றாள். பெரிய பிராட்டிக்குப் பெண்பிள்ளைகள் மீது அதிக பாசம் உண்டு. கன்னிப் பெண்கள் தேனால் அபிஷேகம் செய்தால், உச்சி குளிர்ந்து போவாள். உடனடியாகத்
திருமணத்தையும் நடத்திக் கொடுப்பாள்.
ஆண்களுக்குச் சிறப்பு
பொதுவாக திருமணத் தடை நீங்க தாயாரிடம்தான் பிரார்த்தனை வைப்பார்கள். சற்று வித்தியாசமாக இத்தலத்தில், திருமணம் ஆகாத ஆண்பிள்ளைகளுக்கு, 116 எண்ணிக்கையில் விரலி மஞ்சள் கொண்டு மாலைபோலத் தொடுத்து ஐந்து தேங்காய் நல்லெண்ணெய் அல்லது நெய்வைத்து இங்கு உள்ள ஸ்ரீ ரங்கநாதனுக்கு அர்ச்சனை செய்தால், ஆண்பிள்ளைகளுக்குதிருமணம் கைகூடும் என்று சொல்லப்படுகிறது.
சர்க்கரைக் கோலம்
பிள்ளைப்பேறு இல்லாதவர்கள், ஸ்ரீ ரங்கநாயகி தாயாருக்கு பாலால் அபிஷேகம் செய்து, தாயாரின் வாயிற்படியில் நெய்யால் மெழுகி சர்க்கரையால் கோலமிட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கைகூடும் என்ற ஐதீகம் இக்கோயிலில் உண்டு. சர்க்கரைக் கோலம் என்பது நீரில் சர்க்கரைக் கரைவது போல தன்னை நம்பி வந்த பக்தர்கள் துன்பத்தை கரைத்து, கேட்ட வரம் அருளும் தயாபரி.
பிணி தீர்க்கும் கருடன்
தீராத நோய்கள் ஏற்பட்டால், அது நீங்க வேண்டும் என்பதற்காக நாம் பிரார்த்தித்துக் கொள்வோம். இத்தலத்தில் பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருடாழ்வாருக்கு, ராகு காலத்தில் தேனினால் திருமஞ்சனம் செய்து அவரை வணங்கினால், நம்முடைய சரீரத்தில் ஏற்பட்ட உபாதைகள் – நோய்கள் நீங்குவதாக இத்தலத்தில் ஐதீகம் உண்டு. கல்வெட்டில் இத்தலத்தைப் பற்றிய குறிப்பு உண்டு.
நடைதிறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 8 மணி வரை. மாலை 5 மணி முதல் 7 மணி வரை.
* ஊர்: திருப்பாற்கடல்.
* மூலவர்: க்ஷீராப்திநாதன்.
* தாயார்: கடல் மகள் நாச்சியார்.
* தீர்த்தம்: வேகவதி, சரஸ்வதி, அமிர்தம்.
* விமானம்: சப்தகம் அஷ்டாங்கம்.
* தல விருட்சம்: வன்னி மரம், பின்ன மரம்.
* திருவிழா: கார்த்திகை, மாசி, வைகாசி, ஆவணி.
பொன்முகரியன்
The post தைலப் பிரசாதத்தை அருளும் அத்தி ரங்கநாதர் appeared first on Dinakaran.