தம்மிடம் வரும் ஒவ்வொருவருடைய உள்ளத்தில் இருப்பதையும் அறியக்கூடிய பாபா, அதற்கேற்ற முறையில் அவர்களிடம் நடந்து கொள்வார். பாபா தாம் விரும்பும் எவருக்கும் பிரம்ம ஞானத்தை அளிக்கக் கூடியவர். உபதேசம் செய்வதற்காக எந்தத் தொகையையும் கேட்க மாட்டார் என்று ஒரு செல்வந்தர் கேள்விப்பட்டிருந்தார். அவர் தனது நண்பரிடம் சீரடி சென்று பாபாவிடம் பிரம்ம ஞானத்தை வேண்டப் போவதாகச் சொன்னார். அதற்கு அந்த நண்பர் ‘பிரம்மத்தை அறிவது என்பது அவ்வளவு எளிதல்ல. சம்சார பந்தத்தில் இருக்கும் நீ தர்மத்திற்காக எதுவும் செய்யாத போது பிரம்மஞானம் தேடி பாபாவிடம் செல்வது முறையானதாகத் தோன்றவில்லை’ என்றார்.
அர்த்த ஆதுராணாம் ந குரு: ந பந்து: – செல்வத்திலேயே குறியாக இருப்பவனுக்கு உற்றாருமில்லை உறவினருமில்லை என்று நீதி ஸ்லோகம் சொல்கிறது. மேலும், அர்த்தலுப்த: ஆசை பிடித்தவர்களுக்கு உபதேசம் அளிக்கக் கூடாது என்று குலார்ணவதந்த்ரம் என்ற கிரந்தம் கூறும்.வியாபாரம் செய்து ஐஸ்வரியம் நிறைந்த பொருளாசை கொண்ட ஒருவனை ஸ்ரீமத் பாகவதம் பதினொன்றாம் ஸ்காந்தத்தில் எடுத்துக் காட்டுகிறது. ஐஸ்வர்யம் பெற்றிருந்தும் பரலோகத்திற்கு வேண்டிய தர்மத்தையும் அவன் செய்யவில்லை. ஐஸ்வர்யத்தைக் கொண்டு இகலோகத்திலும் அவன் சுகத்தை அனுபவிக்கவில்லை.
(தர்மாய ந, கர்மாய ந )
இவ்வகையில் ஸ்ரீமத் பாகவதம் சுட்டிக் காட்டும் ஒரு செல்வந்தர் சீரடிக்கு வந்தார். கோபர்காம் ரயில் நிலையம் வந்து அங்கிருந்து சீரடிக்குச் சென்று திரும்பி வர ஒரு குதிரை வண்டியை எற்பாடு செய்து கொண்டார். போக வர ஒரே கட்டணம். சில மணி நேரங்களில் திரும்பி வருவதாக நிபந்தனை வேறு.அவர் சட்டைப்பையில் ரூ.250 வைத்திருந்தார். நேராக மசூதிக்குச் சென்று பாபாவின் காலடியில் விழுந்து வணங்கினார். ‘தங்களிடமிருந்து பிரம்மஞானத்தைப் பெற வந்திருக்கிறேன். அதை சீக்கிரம் கொடுத்தால் சௌகரியமாய் இருக்கும்’ என்று வேண்டி நின்றார். பிரம்மஞானம் என்பது கடையில் வைத்திருக்கும் ஒரு பொருளை போன்றதென்றும் அந்த பொருளை பாபா உடனடியாகக் கொடுத்துவிட்டால் மிக நல்லதென்றும் நினைத்துவிட்டார்.
பாபா அவரிடம், ‘‘என தருமை நண்பனே! என்னிடத்தில் செல்வம், தேக ஆரோக்கியம், பதவி, முதலிய உலகப் பொருள்களையே கேட்கின்றனர். பிரம்மஞானம் கேட்பதற்கு வருபவர்கள் மிகக் குறைவு. உம்மைப் போன்ற மனிதர்கள் ஆத்மார்த்தமாக பிரம்மஞானம் கேட்கும்பொழுது நான் கொடுக்காமல் இருக்க முடியுமா? கொடுக்கப்படும்” என்று சொன்னார்.
பிறகு அங்கே உள்ள ஒரு சிறுவனைப் பார்த்து நந்து மாா்வாடியிடம் சென்று ஐந்து ரூபாய் கைமாற்று வாங்கி வரச் சொன்னார் பாபா. சிறுவன் போய்விட்டு வந்து நந்து மார்வாடியின் வீடு பூட்டியிருக்கிறது என்று சொன்னான். பின்னர் அவனை மளிகைக் கடைக்காரர் பாலாவிடம் போகச் சென்னார். அப்பொழுதும் சிறுவன் வெறுங்கையுடன் திரும்பி வந்தான். இந்த முயற்சி இன்னும் இரண்டு மூன்று முறை நடத்தப்பட்டது. அதனால் நேரம் போய்க் கொண்டிருந்தது.
இதனால் பொறுமை இழந்த செல்வந்தர், குதிரை வண்டியின் வாடகையை நினைத்துக் கவலையடைந்தார். பாபாவிற்கு தேவையான ஐந்து ரூபாயைக் கொடுக்க இயலும் நிலையில் கூட அவர் தன் கையில் வைத்திருந்த ரூபாய் நோட்டுகளை எடுக்கவில்லை. பாபாவிற்கு ஐந்து ரூபாய் அப்பொழுது தேவையில்லையென்றும் பிரம்மஞானம் கேட்டவருக்கு ஒரு சோதனையாகத்தான் இதனை நடத்தினார் என்பதும் அவருக்கு தெரியவில்லை. ஆனால் அந்த மனிதர் உலகிலேயே மிகமிகப்பெரிய பொருளான பிரம்மஞானத்தைக் கேட்டு வந்திருந்தார் என்பதுதான் புதுமை, வியப்பு.
பொறுமை இழந்த அவர், ‘ஓ! பாபா தயவு செய்து சீக்கிரம் எனக்கு பிரம்மத்தைக் காண்பியுங்கள்’ என்றார். அதற்கு பாபா “உமக்கு ஒன்றும் புரியவில்லையா? இவ்வளவு நேரம் உமக்கு பிரம்மஞானம் கொடுப்பதற்கான முயற்சியில் தான் இருந்தேன்” என்றார். “பிரம்மத்தை கண்டுணர்வதற்கு ஒருவன் ஐந்து பொருட்களை அர்ப்பணிக்க வேண்டும். ஐந்து பிராணன்கள், ஐந்து உணர்வுகள், மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகியவற்றை சமர்ப்பித்து சரணடைய வேண்டும். பிரம்மஞானம் கத்தி முனையில் நடப்பதற்குச் சமமான ஒன்றாகும்” என்று தன் போதனையை ஆரம்பித்தார். பிரம்மத்தை அடைவதற்கு சில தகுதிகள் வேண்டும்.
“விடுதலையில் விருப்பம், பற்றின்மையில் பற்று, உள்முகச் சிந்தனை, உண்மைத் தவம், தீயவற்றை விலக்குதல், நல்லவை நாடுதல், ஆன்மாவே எஜமானன், தூய்மையின் விபூதி, குருவின் ஒளி, கடவுள் அருள். இந்தப் பத்தையும் படிப்படியாய் நின்று அப்படியே பற்றிப் பிடி” என்றார் பாபா.
1. காந்த ஊசி எப்பொழுதும் வடக்கிருத்தல் போல ஆன்மா கடவுளை நோக்க வேண்டும். இதுவே முமுக்ஷை அல்லது விடுதலையடைய விருப்பம் எனப்படுவது.
2. முன்பற்றை செலவழிக்கும் இருப்பு தான் பிறப்பு. இப்பிறப்பின் எந்த வரவும் உன்னைப் பின்பற்றும் பின்பற்று தான். எனவே, உலக பொருட்களின் மீது பற்றின்மையை வளர்த்துக்கொண்டு பற்றின்மையில் பற்று வைக்க வேண்டும். உலகப் பற்றை ஒழிப்பதற்கு பற்றற்றான் ஆகிய இறைவனை பற்ற வேண்டும். பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. (திருக்குறள். 350)
3. நமது உணர்வுகள் அனைத்தும் புறத்தே செல்லும் போக்குடையன. அதனை உள்முகமாக உள்ளிருக்கும் ஆத்மாவை நோக்கி ‘‘அந்தர் முகமாக” திருப்ப வேண்டும்.
4. ஒருவன் தீவினைகளிலிருந்து நீங்கியும், தவறுகள் செய்வதை குறைத்தும் கொள்ள வேண்டும்.
5. உண்மையுடைய, தவமுடைய, உள்தரிசனத்துடன் கூடிய பிரம்மச்சர்ய வாழ்க்கை நடத்த வேண்டும்.
6.புலனுணர்வு மகிழ்ச்சியும், நலம் தரும் மகிழ்ச்சியும் ஆக இரண்டும் ஒரு மனிதனை நோக்கி வருகின்றன. அதில் நலம் தரும் மகிழ்ச்சியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
7. நீர் வழித் தக்கைபோல் ஆசைவழிச் செல்லும் புலன்களை அடக்கியாள வேண்டும். எவனுடைய மனம் கட்டுப்பாட்டுடன் இருக்கிறதோ அவன் தான் ஆன்மிக பயணத்திற்குத் தயாராகிறான்.
8. எதையும் விபூதியாக்கும் நெருப்பின் தூய்மையே அநுபூதி தேடும் மனதின் தூய்மையெனத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
9.ஆத்மாநுபூதி எய்தப்பெற்ற குருவின் உதவி அவசியம் தேவை. அவருடைய ஒளியே நம்மை படிப்படியாக எளிதில் அழைத்து செல்ல முடியும்.
10. நிறைவாகக் கடவுளின் அருள் மிக முக்கியமானதாகும். “ஆத்மா எவனைத் தேர்ந்தெடுக்கின்றதோ அவனாலேயே அது பெற படுகின்றது”, என்பது கடோபநிஷதம். இவை விவிலியத்தில் பழைய ஏற்பாட்டில் மோசேவிற்கு ஆண்டவர் கொடுத்த பத்து கட்டளைகளை நினைவுப்படுத்துவதாகக் கொள்ளலாம். அதில் பத்தாவது கட்டளை, ‘நீங்கள் ஆசைப் படாதீர்கள்’( you shall not covet) என்பது இங்குப் பொருத்தமாக அமையும்.
“நல்லதையா, உனது பையில் ஐந்து ரூபாயைப் போன்று ஐம்பது மடங்கு (ரூ.250) பிரம்மம் இருக்கிறது. வெளியே எடு” என்றார் பாபா. செல்வந்தர் பணத்தை எடுத்து எண்ணினார். பத்து ரூபாயான இருப்பத்தைந்து நோட்டுகள் வைத்திருந்தார். “உனது கட்டு பிரம்மத்தைச் சுருட்டிக் கொள்க. பேராசையை முழுமையாக விட்டொழித்தாலன்றி மெய்யான பிரம்மத்தை நீ அடைய முடியாது. பேராசையும், பிரம்மமும் எதிர் எதிர் துருவங்கள்.
ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. எங்கே பேராசை நிலவுகிறதோ அங்கே தியானத்திற்கு இடமில்லை. பேராசை இருக்குமிடத்தில் ஆன்மிக முயற்சிகள், பயிற்சிகள் பயனற்றவையாகும். ஒருவனால் ஜீரணிக்க முடிந்த, கிரகிக்க முடிந்தவற்றை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
“எனது கருவூலம் நிறைந்திருக்கிறது. எவனுக்கும் அவன் விரும்புவதை நான் அளிக்க முடியும். ஆனால் நான் கொடுப்பதைப் பெற்றுக்கொள்ளும் தகுதி அவனுக்கு இருக்கிறதா என்பதை நான் கவனித்துக் கொடுப்பேன். என்னைக் கவனத்துடன் கேட்பீர்களானால் நீங்கள் உன்மையிலேயே நன்மை அடைவீர்கள். இம்மசூதியில் அமர்ந்து கொண்டு நான் உண்மையைத் தவிர வேறெதையும் பேசவில்லை” என்று மிக நீண்ட உரையுடன் தம் போதனையை விளக்கிச் சொன்னார் பாபா.
ஒரு வீட்டிற்கு விருந்தினர்கள் வரும்போது அங்குள்ள அனைவரும் மகிழ்வடைவது போல, மசூதியில் அமர்ந்திருந்த அத்தனை பக்தர்களும் அந்த செல்வந்தருக்குப் பரிமாறப்பட்ட ஆன்மிக விருந்தைக் கேட்டு மகிழ்ந்தனர். செல்வந்தரும் பாபாவிடம் ஆசிபெற்று திரும்பினார்.ஒரு பொருளைப் பெறுவதற்கு தமக்கு எவ்விதத் தகுதியும் இல்லாதபோது அது வேண்டுமென்று கேட்பது கூடாது. வேறு ஒரு பக்தரும் கடவுளைக் காட்டுமாறு பாபாவிடம் கேட்க, செல்வந்தருக்கு செய்த மாதிரியே ஒரு பையனை மார்வாடியிடமும், வட்டிக் கடைக்காரரிடமும் பாபா அனுப்பினார். பையன் திரும்பி வந்தான்.
ஆனால் பாபா நானா சாந்தோர்க்கரிடம் நூறு ரூபாய் கேட்க, நானா மார்வாடிக்கு ஒரு சீட்டு கொடுத்து அனுப்பினார். அவர் உடனே பணத்தை அனுப்பி வைத்தார். கடவுளை கேட்ட பக்தரிடம் “இந்த உலகில் எல்லாமே இவ்விதம் தான்” (Everything is just like this in this world) என்றார். பாபா பணம் கேட்டபோது அது வரவில்லை. பாபாவிடம் கொடுத்தால் பணம் திரும்பி வராது என்ற எண்ணத்தில் மார்வாடியும், வட்டிக்கடைக்காரனும் பயந்திருப்பார்கள்.
நானா போன்ற பெரிய அதிகாரி கேட்டவுடன் பணம் கிடைத்து விட்டது. ஒன்றைக் கேட்பதற்கு முன்னால் அதை பெறுவதற்குரிய தகுதியும் வேண்டும் (One must deserve before one can ask for anything) என்பதே பாபா கற்பிக்க விரும்பிய பாடம்.
இதைப்போலவே பகவான் இராமகிருஷ்ணரிடத்தில் ஒரு டாக்டர் கடவுளின் தரிசனத்தை கேட்ட போது ‘நீ டாக்டர் ஆவதற்கு எத்தனை வருடங்கள் படித்தாயோ அதைப்போலவே ஆன்மிகக் கல்வியைப் படிக்க வேண்டும்’ என்று கூறினார்.
உலக விவகாரங்களை நடத்திக் கொண்டு மக்களுக்கு உலகில் எங்ஙனம் நடக்கப் பழக வேண்டுமென போதித்தார் பாபா. நாலைந்து வீடுகளில் உணவை யாசித்து எப்பொழுதும் வேப்பமரத்தடியிலேயே வாழ்ந்து வந்தார்.“இத்தகைய அசாதாரணமான, அறிவெல்லைகடந்த, விலைமதிப்பற்ற, தூய்மையான மாணிக்கக்கல் (சாயிபாபா) அவதரித்த இந்நாடு ஆசீர்வதிக்கப்பட்டது” என்று
ஹேமந்த் ஸ்ரீசாயி சத்சரிதத்தில்
பதிவு செய்கிறார்.
“நெய்யிடை நல்லதோர்சோறும்
நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக்காயும் கழுத்துக்குப்
பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும்
தந்து என்னை வெள்ளுயிர்
ஆக்கவல்ல
பையுடை நாகப்பகைக் கொடியானுக்கேப்
பல்லாண்டு
கூறுவனே”
‘பெருமானே! நெய்ச்சோறும், வெற்றிலைப் பாக்கும், ஆபரணங்களும், சந்தனமும், உனக்குச் செய்யும் சேவையையும் விரும்பியபடி கொடுத்தருளினாய்.இப்படிச் சம்சாரியாய் கிடந்த என்னை ஞானம் பெறச் செய்தாய். உனக்குப் பல்லாண்டு எனச் சொல்லிப் பாடுவேன்’ என்று பெரியாழ்வார் திருமொழி பாடுவார். சாயிநாதருக்கும் அவர் அருளிச்செய்ததிருமொழிக்கும் நாமும் பல்லாண்டுகூறுவோம். சாயி சரணம்.
முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள்
The post “பத்து கட்டளைகள்” appeared first on Dinakaran.