×

போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் சிறை நிரப்பும் போராட்டம்

தஞ்சாவூர், ஜன.23: போக்குவரத்து தொழிலாளர்களின் 15 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிக்க வலியுறுத்தி தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் நடந்த சிஐடியு மாநிலம் தழுவிய சிறை நிரப்பு போராட்டத்தில் 100 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத் தொழிலாளர்களின் 15 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிக்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் நேற்று தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற மாநிலம் தழுவிய சிறை நிரப்பும் போராட்டத்தில் 100 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்திற்கு, கும்பகோணம் போக்குவரத்து சிஐடியு மத்திய சங்கத் தலைவர் த.காரல் மார்க்ஸ் தலைமை வகித்தார். அரசு விரைவு போக்குவரத்து கழக சிஐடியு செயலாளர் செங்குட்டுவன் முன்னிலை வகித்தார்.

சிஐடியூ மாநில செயலாளர் ஜெயபால் சிறை நிரப்பும் போராட்டத்தினை துவக்கி வைத்து பேசினார். போராட்டத்தில், கடந்த 2023 ஏப்ரல் 1 முதல் ஓய்வு பெற்றவர்களுடைய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு தொகை உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்கப்பட வேண்டும், 95 ஆயிரம் ஓய்வூதியர்களுக்கு உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 109 மாதகால அகவிலைப்படி உயர்வு உடனடியாக வழங்க வேண்டும். விழா காலங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கக் கூடாது. கழக பேருந்துகளை தனியாரிடம் குத்தகைக்கு விடக் கூடாது. ஓட்டுனர், நடத்துனர் உட்பட முப்பதாயிரம் காலி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டும். அவரவர் கல்வித் தகுதிக்கேற்ப வாரிசு பணி வழங்கப்பட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும்.

போக்குவரத்து கழகங்களில் தனியார்மய நடவடிக்கை கைவிடப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு பேருந்துகளில் தினமும் பயணம் செய்யும் இரண்டு கோடி பயணிகளால் 7500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை ஈடுகட்ட தமிழ்நாடு அரசு அதிகமான நிதியினை ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. சிறை நிரப்பு போராட்டத்தினை சிபிஎம் மாநகரச் செயலாளர் வடிவேலன், சிஐடியு மாவட்ட துணை செயலாளர் அன்பு, டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் மதியழகன், அரசு ஓய்வுதியர் சங்க ஒருங்கிணைப்பாளர் குருசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். போராட்டக் குழு நிர்வாகிகள் வெங்கடேசன், ராமசாமி, ஞானசேகரன், பாஸ்கரன், ஜீவா, ராஜசேகரன், கரிகாலன், எல். சவுந்தர்ராஜன் உள்ளிட்டர் பங்கேற்றனர்.

The post போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் சிறை நிரப்பும் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,CITU ,Tamil Nadu Government ,
× RELATED இணையவழி குற்றங்களைத் தடுக்க மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்