திருமயம், ஜன.23: திருமயம் அருகே சட்ட விரோதமாக இயங்கியதாக கூறப்படும் கல்குவாரி அளவிடும் பணி மூன்று நாட்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்றுடன் முடிவடைந்தது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே சட்டவிரோத கனிமக் கொள்ளைக்கு எதிராக போராடிய ஜகபர் அலி என்பவர் குவாரி உரிமையாளர்களால் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் எதிரொலியால், கொலை செய்யப்பட்ட ஜகபர் அலி ஏற்கனவே புகார் தெரிவித்திருந்த திருமயம் அருகே துளையானூர் கிராமத்தில் உள்ள ராசு மற்றும் ராமையா ஆகியோருக்கு சொந்தமான குவாரிகளில் நேற்றுமுன்தினம் கனிமவளத்துறை அதிகாரிகள் மற்றும் புவியியலாளர்கள் ட்ரோன் உதவியுடன் அளவிடும் பணியை மேற்கொண்டனர்.
குறிப்பாக அவர்கள் ஆய்வு மேற்கொண்ட ராசு மற்றும் ராமையாவுக்கு சொந்தமான குவாரிகளின் ஒப்பந்த காலம் 2023ம் ஆண்டுடன் முடிவடைந்த நிலையில் அந்தக் குவாரிகளில் சட்ட விரோதமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் ஏற்கனவே புதுக்கோட்டை கனிமவளத்துறை அதிகாரிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே ராமையாவுக்கு ரூ.6 கோடியே 70 லட்சம் ரூபாய் அபராதமும், ராசுக்கு ரூ.12 கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரண்டாவது நாளாக திருமயம் அருகே உள்ள மலைக்குடிபட்டியில் உள்ள கல்குவாரிகளிலும், அதேபோல் மெய்யபுரம் பகுதியில் உள்ள குவாரிகளிலும் அளவிடும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
இந்நிலையில் மூன்று நாட்கள் அளவிடும் பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் நேற்று மதியத்துடன் கல்குவாரி அளவிடும் பணியை முடித்துக் கொண்டனர். அதேசமயம் சம்பந்தப்பட்ட கல் குவாரிகளில் எவ்வளவு தூரம் சட்ட விரோதமாக அளவுக்கு அதிகமான கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என்ற அளவீட்டை கனிமவளத்துறை இணை இயக்குனருக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளதாக கனிமவளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
The post நெல்லில் பதறுகளை தூற்றும் பணி திருமயம் அருகே பிரச்னைக்குரிய கல்குவாரிகளை அளவிடும் பணி 2 நாளில் முடிந்தது appeared first on Dinakaran.