கோத்தகிரி, ஜன.23: கோத்தகிரி நகர் பகுதியின் மையப்பகுதியான காமராஜர் சதுக்கம் பகுதியில் உள்ள மாவட்ட நிர்வாகம் மூலம் அமைக்கப்பட்டுள்ள வாட்டர் ஏடிஎம் சுகாதாரமற்ற நிலையிலும், முறையாக குடிநீர் வராமலும், தண்ணீர் பிடிக்கும் பாத்திரம் எந்த பராமரிப்பும் இன்றி நோய் பரவும் நிலையில் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் விதமாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதியும், வனவிலங்குகள் நலன் கருதியும் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், மிக முக்கிய சுற்றுலா தலங்கள் உட்பட பல இடங்களில் நீலகிரி மாவட்ட நிர்வாகம் மூலம் வாட்டர் ஏடிஎம் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இந்த வாட்டர் ஏடிஎம்ல் 5 ரூபாய் மற்றும் 2 ரூபாய் நாணயங்களை செலுத்தி குடிநீர் பிடித்து கொள்ளும் வசதி செய்யப்பட்டு இருந்தது. இந்த வாட்டர் ஏடிஎம் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு சில நாட்களிலேயே உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் போதிய வரவேற்பை இழந்தது. தற்போது வரை மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் படி நடைமுறையில் இருக்கும் வாட்டர் ஏடிஎம் சேவை முறையாக பராமரிப்பு இன்றி இருக்கும் அவல நிலையில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, கோத்தகிரி நகர் பகுதியின் மைய பகுதியான நேரு பூங்கா அமைந்திருக்கும் காமராஜர் சதுக்கம் பகுதியில் உள்ள வாட்டர் ஏடிஎம்மில் நாணயம் செலுத்தியும் குடிநீர் வராமலும், தண்ணீர் பிடிக்கும் பாத்திரம் சுகாதார மற்ற முறையிலும் இருக்கும் அவல நிலையில் உள்ளது.
குடிநீர் பிடித்து குடிக்க சென்ற உள்ளூர் வாசி ஒருவர் கூறுகையில், ‘‘என்னால் 5 லிட்டர் தண்ணீர் பாட்டில் எடுத்து வர முடியாது, அதனால் நான் வாட்டர் ஏடிஎம்மில் தண்ணீர் பிடிக்க வந்து நாணயம் செலுத்தி தண்ணீர் பிடிக்க சென்றேன் அங்கு முறையாக தண்ணீர் வராமல் வெறும் பத்து சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. மேலும் தண்ணீர் பிடிக்கும் பாத்திரம் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. இதில், தண்ணீர் பிடித்து குடிக்க கூட முடியாத நிலையில் உள்ளது.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற ஏடிஎம் இயந்திரங்களை முறையாக பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு நடைமுறை படுத்த வேண்டும்.’’ என்றார்.
The post கோத்தகிரி நகர் பகுதியின் சுற்றுலா தலங்களில் சுகாதாரமற்ற நிலையில் வாட்டர் ஏடிஎம் appeared first on Dinakaran.