கூடலூர், ஜன.23: கூடலூர் நகரில் சுங்கம் ரவுண்டானா முதல் பழைய பேருந்து நிலையம் சிக்னல் வரை உள்ள சாலையின் இரு புறமும் கடைக்காரர்களோ, கடையில் வேலை செய்பவர்களோ, பொதுமக்களோ தங்களது இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த கூடாது. அவ்வாறு நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நகரத்தில் உள்ள கடைக்காரர்கள் தங்களது கடைக்கு முன்பாக உள்ளூர்வாசிகள் மற்றும் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஏதாவது பொருட்களை இறக்கி வைத்து வியாபாரம் செய்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு வியாபாரம் செய்வதற்கு வியாபாரிகள் தங்களது கடைகளுக்கு முன்பாக அனுமதி கொடுக்க கூடாது. மேலும், லாரிகளில் கொண்டு வரப்படும் சரக்குகளை கடைகளுக்கு இறக்குபவர்கள் காலை 8 மணிக்குள் இறக்கி விடவேண்டும்.
இதேபோல் பகல் நேரத்தில் 12 மணி முதல் 3 மணி வரை சரக்குகளை இறக்கிக் கொள்ளலாம். இரவு நேரத்தில் 9:00 மணிக்கு மேல் 11 மணி வரை லாரிகள் கடைகளில் சரக்கு இறக்க அனுமதி இல்லை. மேலும், கடைகளுக்கு முன்பாக தடுப்புகள் அமைத்து சாலையில் வைக்க கூடாது. கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் தங்களது வாகனங்களை வேறு பகுதியில் நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்கிய பிறகு வாகனத்தை கொண்டு வந்து ஏற்றி செல்லலாம். குறிப்பாக கட்டில், பீரோ போன்ற பொருட்களை கடைகளில் இருந்து ஏற்றும் போது சரக்கு வாகனத்தின் ஒட்டுநர் கண்டிப்பாக அமர்ந்து இருக்க வேண்டும். வாகனத்தை கடைக்கு முன்பாக நிறுத்தி செல்லக்கூடாது. அவ்வாறு கடைக்கு முன்பாக ஓட்டுநர் இல்லாமல் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தால் அந்த வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்படும்.
மேற்கண்ட விதிமுறைகளை அனைத்து வியாபாரிகளும் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுளது. மீறுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூடலூர் போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இதேபோல் கூடலூர் நகரில் போக்குவரத்தை சீரமைக்கும் வகையில் நேற்று முதல் கடைக்காரர்கள் மற்றும் கடைகளில் வேலை செய்பவர்களின் வாகனங்களை தற்காலிகமாக நிறுத்துவதற்கு கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் கூடலூர் டிஎஸ்பி ஆகியோர் தற்காலிக ஏற்பாடு செய்துள்ளனர். இதன்படி புதன்கிழமை முதல் காலை 7 மணி முதல் அக்கார்டு சாலையில் உள்ள ஆவின் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் வாகனங்களை பார்க்கிங் செய்து கொள்ளலாம்.
ஆவின் வாகன நிறுத்த பகுதிக்கு வரும் வாகனங்கள் சின்னப்பள்ளி வாசல் வழியாக செல்லவும், வாகனங்கள் திரும்பி செல்வதற்கு வனேஸ்வரி கோவில் வழியாக சுங்கம் பகுதிக்கு வரும் சாலையை பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகள் குறுகிய சாலை என்பதால் ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கூடலூர் நகர் பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கு புதிய கட்டுப்பாடு அமல் appeared first on Dinakaran.