கே.வி.குப்பம், ஜன.23: கே.வி.குப்பம் ஒன்றியத்தில் ₹70.70 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை திட்ட இயக்குநர் ஆய்வு செய்தார். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட திட்ட இயக்குநர் செந்தில்குமரன் நேற்றுமுன்தினம் ஆய்வு செய்தார். அப்போது மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தலா ₹29.70 லட்சம் மதிப்பீட்டில் சோழமூர் மற்றும் கொத்தமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற அலுவலகங்கள், கொத்தமங்கலம் ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ₹11 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடம், பசுமாத்தூர் ஊராட்சியில் அயோத்தி தாசர் குடியிருப்பு திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை, திருமணி ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் செய்து வரும் நூறு நாள் பணிகள், திருமணி பொன்னியம்மன் கோயில் தெருவில் ₹30 லட்சம் மதிப்பீட்டில் திருமணி-கீழ்மொணவூர் சாலையை இணைக்கும் மேம்பால பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் திட்டப்பணிகள் தொடர்பான கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிடிஓக்கள் பெருமாள், சதீஷ்குமார், பொறியாளர் ராஜேஸ்வரி, ஊராட்சி செயலாளர் சாமுவேல், துணை பிடிஓக்கள், ஓவர்சீஸ், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post ₹70.70 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் திட்ட இயக்குநர் ஆய்வு கே.வி.குப்பம் ஒன்றியத்தில் appeared first on Dinakaran.