×

சைபர் கிரைம் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு எஸ்பி வழங்கினார் வேலூர் மாவட்ட அளவில் நடந்த

வேலூர், ஜன.23: வேலூர் மாவட்ட அளவில் நடந்த சைபர் கிரைம் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எஸ்பி மதிவாணன் நேற்று பரிசு வழங்கினார். தமிழ்நாடு காவல் துறை சார்பில் மாவட்டம் தோறும் சைபர் கிரைம் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி வேலூர் மாவட்ட எஸ்பி மதிவாணன் உத்தரவின்படி சைபர் கிரைம் ஏடிஎஸ்பி அண்ணாதுரை வழிகாட்டுதலின்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு ‘சைபர் கிரைம் விழிப்புணர்வு’ என்ற தலைப்பில் கட்டுரை போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள் கடந்த 8ம் மற்றும் 9ம் தேதிகளில் மாவட்டம் முழுவதும் அந்ததந்த பள்ளிகளில் நடைபெற்றது. இவற்றில் திரளான மாணவர்கள் பங்குபெற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இந்த போட்டிகளில் பங்கு பெற்று மாவட்ட அளவில் சிறந்த 3 கட்டுரை மற்றும் ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டன.

அதன்படி சைபர் கிரைம் விழிப்புணர்வு கட்டுரை போட்டியில் முதல் பரிசாக ஊசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 6ம் வகுப்பு மாணவி லித்திய, 2வது பரிசாக வஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 9ம் வகுப்பு மாணவி புகழினி, 3வது பரிசாக கீழ்அரசம்பட்டு பெண்கள் உயர்நிலைப்பள்ளியை சார்ந்த 9ம் வகுப்பு மாணவி சுவாதி ஆகியோருக்கும், ஓவியப்போட்டியில் முதல் பரிசாக கரிகிரி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி அபின் பானு, 2வது பரிசாக இடையன்சாத்து அரசு மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 9ம் வகுப்பு மாணவர் ஐசக் ஆண்டர்சன் மற்றும் 3வது பரிசாக வஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி பிருந்தா ஆகியோருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நடந்தது. இதில் முதல் மூன்று பரிசுகள் தலா ₹1,500, ₹1000, ₹500 வெகுமதியும், பாராட்டு சான்றிதழும் எஸ்பி மதிவாணன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சைபர் கிரைம் ஏடிஎஸ்பி அண்ணாதுரை, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ரஜினி குமார், எஸ்ஐ சதிஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சைபர் கிரைம் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு எஸ்பி வழங்கினார் வேலூர் மாவட்ட அளவில் நடந்த appeared first on Dinakaran.

Tags : SP ,Vellore ,Mathivanan ,TAMIL NADU POLICE DEPARTMENT ,Dinakaran ,
× RELATED காதல் திருமணம் செய்த மனைவியை வரதட்சணை...