செங்கல்பட்டு, ஜன, 23: செங்கல்பட்டு அருகே தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து 14 மாத ஆண் குழந்தை பரிதாபமாக பலியானது. இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். செங்கல்பட்டு அடுத்த மேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் என்பவரது மகன் மணிகண்டன் (28). இவர் எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறார். இவருக்கும் வண்டலூர் அடுத்த கண்டிகையை சேர்ந்த ஜாய்ஸ் என்பவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆல்வின் ஜோ மற்றும் அகஸ்டின் என்கிற 14 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று மதியம் குழந்தை அகஸ்டினுக்கு, தாய் ஜாய்ஸ் வீட்டின் வெளியே அமர்ந்து உணவு ஊட்டியுள்ளார். உணவு ஊட்டியபிறகு வீட்டின் உள்ளே சென்று வருவதற்குள் வீட்டின் அருகில் தெருக் குழாய் அருகே தண்ணீர் நிரப்பி வைத்திருந்த பக்கெட்டில் தலைக்குப்புற கவிழ்ந்து அதிகளவில் தண்ணீரை குடித்த குழந்தை அகஸ்டின் மயக்கமடைந்துள்ளது. உடனே அகஸ்டினை செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த குழந்தை அகஸ்டின் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த செங்கல்பட்டு பாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post செங்கல்பட்டு அருகே சோகம் தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து 14 மாத ஆண் குழந்தை பரிதாப பலி: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.