×

பூந்தமல்லியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

பூந்தமல்லி, ஜன. 23: பூந்தமல்லியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை போக்குவரத்து போலீசார் அதிரடியாக அகற்றினர். பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே டிரங்க் சாலையில் ஏராளமான சாலையோரக் கடைகள் செயல்பட்டு வந்தன. மேலும் அப்பகுதியில் உள்ள பெரிய துணிக்கடைகள், உணவகங்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற கடைகளுக்கு பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையோரத்தில் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வந்தன.
இதனால் நாள்தோறும் டிரங்க் சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும் மெட்ரோ ரயில் பணிகளாலும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் உள்ளது.

இதையடுத்து சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளை அகற்ற போக்குவரத்து போலீசார் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படாமல் இருந்தன. போலீசார் பலமுறை எச்சரித்தும் சாலையோர வியாபாரிகள் அலட்சியமாக இருந்தனர். இந்தநிலையில் பூந்தமல்லி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமவுலி தலைமையிலான போலீசார் மற்றும் நகராட்சி பணியாளர்கள் இணைந்து நேற்று ஆக்கிரமிப்பு செய்திருந்த சாலையோரக் கடைகளை அப்புறப்படுத்தினர். பூந்தமல்லியில் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகள் மற்றும் போக்குவரத்து இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர். இதில், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post பூந்தமல்லியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Poonamalli ,Dinakaran ,
× RELATED வளசரவாக்கம் பகுதிகளில்...