×

சென்னையில் வரும் 25ம் தேதி குடும்ப அட்டைதாரர்கள் குறைதீர் முகாம்: உணவு பொருள் வழங்கல் துறை அறிவிப்பு

சென்னை, ஜன.23: பொதுவிநியோக திட்டத்தின் பயன்களை பொதுமக்கள் அறியும் வகையில் வரும் 25ம் தேதி சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பொது விநியோக திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வரும் 25ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலை கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று வழங்கப்படும். மேலும், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலக பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் வரும் 25ம் தேதி குடும்ப அட்டைதாரர்கள் குறைதீர் முகாம்: உணவு பொருள் வழங்கல் துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Food Distribution Department ,Food Distribution and Consumer Protection Department ,Dinakaran ,
× RELATED சென்னையில் வரும் 25ம் தேதி குடும்ப...