குமாரபாளையம், ஜன.22: குமாரபாளையத்தில், ஒருநாள் முன்னதாகவே ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், 600 காளைகளுடன் 400 வீரர்களும் பங்கேற்கின்றனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவையின் சார்பில், கடந்த 8 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டு போட்டிகள் நடைபெற்று வந்தது. 9ம் ஆண்டாக வரும் பிப்ரவரி மாதம் 2ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமென தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டது. வாடிவாசல் கால்கோள் விழாவை தொடர்ந்து பார்வையாளர் கேலரிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், குறிப்பிட்ட நாளன்று நாமக்கல் மாவட்டத்தில் அரசு விழா நடைபெறுவதால், குமாரபாளையம் ஜல்லிக்கட்டு போட்டியை ஏற்கனவே அறிவித்த தேதியிலிருந்து ஒருநாள் முன்னதாக, பிப்ரவரி மாதம் 1ம் தேதி காலை நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் வினோத்குமார் கூறுகையில், ‘குமாரபாளையம் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி பிப்ரவரி மாதம் 1ம் தேதி காலை துவங்குகிறது. இப்போட்டியில் 600 காளைகளும், 400 வீரர்களும் பங்கேற்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது,’ என்றார்.
The post ஒருநாள் முன்னதாகவே ஜல்லிக்கட்டு போட்டி appeared first on Dinakaran.