புதுடெல்லி: முல்லைப் பெரியாறு தொடர்பான பிரதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதேப்போன்று இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசையும் ஒரு தரப்பாக இணைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில், கேரள மாநிலத்தை சேர்ந்த மேத்யூ நெடும்பாரா என்பவர் உட்பட மொத்தம் ஐந்து வழக்கறிஞர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 120அடிக்கும் கீழாக குறைக்க வேண்டும் என்று புதிய மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல் மற்றும் சந்திப் மேத்தா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ,” அணையின் நீர் மட்டத்தை குறைக்க நீங்கள் எப்படி கூற முடியும்.
அதனை கண்காணிக்க குழு உள்ளது. எனவே இந்த வழக்கை வரும் 2027ம் ஆண்டுக்கு தள்ளிவைக்க போகிறோம் என்று கடும் எச்சரிக்கையோடு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் உமாபதி மற்றும் குமணன், ‘‘முல்லைப் பெரியாறு வழக்கை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி சூர்யகாந்த் அமர்வு விசாரித்து வருகிறது. அடுத்த விசாரனை வரும் பிப்ரவரி 19ம் தேதி வரவுள்ளது என்று விளக்கமளித்தனர். இதையடுத்து அதனை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள்,” இந்த வழக்கை நாங்கள் விசாரிக்க முடியாது. அணை தொடர்பாக விசாரிக்கும் உரிய அமர்விடம் சென்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கலாம் என்று திட்டவட்டமாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
தள்ளுபடி செய்யக்கோரி புதிய மனு
மதுரையை சேர்ந்த பி.ஸ்டாலின் என்பவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின் நேற்று ஒரு புதிய இடையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மேத்யூ நெடும்பாரா உட்பட ஐந்து வழக்கறிஞர்கள் தாக்கல் செய்துள்ள மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும். அதனை விசாரிக்க முகாந்திரமே இல்லை. மேலும் விசாரணைக்கும் அந்த மனுக்கள் உகந்தது கிடையாது. ஏனெனில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்றும், நிபுணர் குழு ஆய்வு தேவையில்லை எனவும் உச்ச நீதிமன்றம் முன்னதாக தீர்க்கமான உத்தரவை பிறப்பித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
The post முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க கோரிய மனுதாரருக்கு எச்சரிக்கை: வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.