கிணத்துக்கடவு, ஜன.21: கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தென்னைக்கு அடுத்தபடியாக தக்காளியை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். விவசாயிகள் உற்பத்தி செய்யும் தக்காளி, பொறியல் தட்டை, வெண்டைக்காய், பச்சை மிளகாய், கத்தரிக்காய் உள்ளிட்ட வேளாண் பொருட்களை கிணத்துக்கடவில் செயல்பட்டு வரும் அன்னை இந்திரா தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து நேரடி ஏலத்தில் விற்பனை செய்து செல்கின்றனர். தீபாவளி பண்டிகைக்கு முன்பு வரை அதிகளவில் இருந்து வந்த தக்காளி உற்பத்தி தீபாவளி முடிந்ததும் குறைந்து போனது.
தற்போது கிணத்துக்கடவு பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், தக்காளி செடிகள் காய்ந்து வருகிறது. இதனால் கிணத்துக்கடவு மார்கெட்டுக்கு வரும் தக்காளி வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் நேற்று மார்கெட்டுக்கு இரண்டு டன் அளவிலான தக்காளி மட்டுமே விற்பனைக்கு வந்தது. 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி அதிகபட்சமாக ரூ 200 வரை மட்டுமே விலை போனது. இதனால் ஒரு கிலோ தக்காளி ரூ.14 ஆக குறைந்து போனது. பனிக்காலம் முடிந்த பிறகு, தக்காளி உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post கிணத்துக்கடவு மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைந்தது appeared first on Dinakaran.