×

கூடுவாஞ்சேரி அருகே வீட்டில் நர்ஸ் மர்ம சாவு: போலீசில் பெற்றோர் புகார்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே, வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்ணின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கல்லமேடு கிராமம், சர்ச் தெருவை சேர்ந்த ஜார்ஜ் என்பவரின் மகள் சுமதி (38). இவருக்கும் கூடுவாஞ்சேரி அடுத்த நந்திவரம் பள்ளி கூட தெருவை சேர்ந்த ஜோசப் என்பவரின் மகன் அரோன்ராஜ் (40) என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

அரோன்ராஜ் கார் டிரைவராக உள்ளார். சுமதி நந்திவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அரை நிர்வாணமாக மர்மமான முறையில் சுமதி இறந்து கிடந்துள்ளார். அப்போது, அவரது கணவர் வீட்டில் இல்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து, தகவலறிந்த சுமதியின் பெற்றோர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, சுமதி கையில் அயன் பாக்ஸ்சை பிடித்தபடியும், அவரது மர்ம உறுப்பில் தீக்காயம் இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதை தொடர்ந்து, சுமதியின் பெற்றோர் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி நேற்று காலை புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமதியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post கூடுவாஞ்சேரி அருகே வீட்டில் நர்ஸ் மர்ம சாவு: போலீசில் பெற்றோர் புகார் appeared first on Dinakaran.

Tags : Guduvanchery ,George ,Church Street, Kallamedu village ,Tiruvallur district… ,Dinakaran ,
× RELATED இலவசங்களால் வேலை செய்வதை தவிர்க்கும் மக்கள்: உச்ச நீதிமன்றம் கருத்து