×

ரூ.1.76 கோடியில் வணிக வளாகம் கட்டுவதற்காக புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் வளாகத்தில் கடைகள் அகற்றமா? வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் வளாகத்தில் ரூ.1.76 கோடியில் வணிக வளாகம் கட்டுவதற்காக கடைகள் மற்றும் குடியிருப்புகள் அகற்றப்படுவதாக கூறப்படுவதையடுத்து கோயில் வாசலில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் அடுத்த புட்லூரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர் கோயிலில் நீராடிவிட்டு ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி பிரகாரத்தை 11 முறை சுற்றி வந்து வழிபடுகின்றனர்.

இப்படி 9 வாரம் பிரார்த்தனை செய்தால் வேண்டிய வரம் நிறைவேறும் என்பது ஐதீகமாக உள்ளது. இந்நிலையில் தனிநபர் கட்டுப்பாட்டில் இருந்த இந்த கோயில் கடந்த 2007ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குச் சென்றது. சென்னை – திருவள்ளூர் மார்க்கத்தில் திருவள்ளூருக்கு முந்தைய புட்லூர் ரயில் நிலையத்தில் இறங்கி செல்லக்கூடிய வழியில் இந்த கோயில் அமைந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குழந்தை வரம் வேண்டி இந்த கோயிலுக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த கோயில் வாசலில் பூ, பழம், விபூதி, குங்குமம், வளையல் போன்ற தரிசனத்திற்கு தேவைப்படும் பொருட்களை விற்பனை செய்ய 100க்கும் மேற்பட்டோர் கடை வைத்து தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தக் கோயில் வளாகத்தில் ரூ.1.76 கோடி மதிப்பில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கோயில் வாசலில் உள்ள கடைகள் மற்றும் ஒரு சில குடியிருப்புகளை அகற்ற போவதாகவும் கூறப்படுகிறது. இதனால் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு வியாபாரிகள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கோயில் வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கிலும், விசேஷ நாட்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களும் வந்து செல்கின்றனர். பக்தர்களுக்கு தேவையான பெண்கள், கர்ப்பிணிகள் குளிப்பதற்கும், உடை மாற்றவும் அறைகள், குடிநீர் வசதி மற்றும் கோயிலுக்கு வருவதற்கான சாலை வசதி, தங்குவதற்கான தங்கும் விடுதி போன்ற அடிப்படை வசதியை கோயில் நிர்வாகம் சார்பில் செய்து தர வேண்டும்.

அடிப்படை வசதிகளை செய்து தராமல், 22 ஆண்டுகளாக கோயில் வாசலில் கடை வைத்து பிழைப்பு நடத்தி வரும் எங்கள் கடைகளை அப்புறப்படுத்தி வணிக வளாகம் கட்ட அனுமதிக்க கூடாது. கோயில் வாசலில் உள்ள கடைகளை அகற்றி எங்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் வியாபாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். வியாபாரிகளின் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர்.

The post ரூ.1.76 கோடியில் வணிக வளாகம் கட்டுவதற்காக புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் வளாகத்தில் கடைகள் அகற்றமா? வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Putlur Angala Parameswari Amman ,Tiruvallur ,Putlur Angala Parameswari Amman temple ,Angala Parameswari Amman temple ,Putlur ,Tiruvallur.… ,Dinakaran ,
× RELATED தமிழக கடலோரத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை: 8ம் தேதி முதல் கனமழை